

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மதுரையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கரோனா தொற்று ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று எதிர்ப்பு தினம் கடைபிடித்தது.
இதையடுத்து மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச பொதுச் செயலர் மேலூர் வி.அல்போன்ஸ் தலைமை வகித்தார்.
சிஐடியூ வி.பிச்சை, டிடிஎஸ்எப் எஸ்.சம்பத், ஏஐடியுசி எம்.நந்தாசிங், எச்எம்எஸ் எஸ்.ஷாஜஹான், ஏஏஎல்எல்எப் எஸ்.சங்கையா, டியுசி செல்வம் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை நேரத்தை அதிகரிக்காதே, தொழிலாளர் நலச் சட்டங்களை புறந்தள்ளாதே, டிஏவை முடக்காதே, முறைசாரா மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதிய நிவாரணம் கொடு, தனியார்மயங்களை கைவிடு, மின் மசோதாவை கைவிடு, அத்தியவாசிய பணிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கு என்பது உட்பட பல்வேறு கோஷங்களை தொழிலாளர்கள் எழுப்பினர்