ஜோதிமணி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக நிர்வாகி புகார்
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் ஜே.துரை சேனாதிபதி, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வாலிடம் இன்று (மே 22) நேரில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
"கடந்த 18-ம் தேதி தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சு பிரதமருக்கு எதிராக சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளைத் தூண்டும் வகையில் உள்ளது. எனவே, ஜோதிமணி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, புதுச்சேரி பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி கணேஷ், மாநில செயலாளர் சகுந்தலா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் செந்திலதிபன், மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
