பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிகோரிய மனு தள்ளுபடி

பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிகோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

மதுரையில் உள்ள பள்ளி வாசல்களில் மே 25-ல் இரண்டு மணி நேரம் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் சிறு சிறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். நிறைவு நாளான மே 25-ல் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த வேண்டும்.

ரம்ஜான் தொழுகை இஸ்லாமியர்களின் மத கடமையாகும். எனவே மே 25-ல் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் மதுரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு வீடியோ கான்பரன்சில் இன்று விசாரித்தது.

பின்னர் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக முடிவு எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. கரோனா பரவி வரும் காலத்தில் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in