

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கேரளத்தின் பல்வேறு மீன்பிடித் துறைமுகங்களையும் தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித்தொழில் செய்பவர்கள். பொதுமுடக்கத்தால் இவர்கள் தங்களது விசைப் படகுகளை அந்த அந்த மீன்பிடித் துறைமுகத்திலேயே நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில், நீண்டகாலமாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால் விசைப்படகுகள் சேதமாகும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் குமரி மீனவர்கள்.
இதுகுறித்து கேரளத்தில் விசைப்படகு கேப்டனாக (ஓட்டநர்) இருக்கும் குமரியைச் சேர்ந்த கடிகை அருள்ராஜ், 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் கேரளாவை நம்பித் தொழில் செய்து வருகிறோம். குமரி மாவட்டத்தில், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம் துறைமுகங்களில் அதிக படகுகளை நிறுத்தப் போதுமான வசதி இல்லாததால், குமரி மாவட்ட மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கேரளாவிலுள்ள கொல்லம், கொச்சி, முனம்பம், சேற்றுவா, பேப்பூர் போன்ற துறைமுகங்களில் வைத்து அங்கேயிருந்து தொழில் செய்கிறோம். இதுபோக, ஒருசில குமரி மாவட்டத் தொழிலாளர்கள், கேரளாக்காரர்களின் விசைப்படகில் தொழிலுக்குச் செல்வார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே தொழில் வளம் இல்லாததால் அநேக விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒருசில விசைப்படகுகள் தொழிலுக்குச் சென்று, டீசல் செலவுக்கே போதிய தொகை ஈட்டாமல் பெரும் நஷ்டமடைந்து வருவதுமாக இருந்தது. பின்னர் அவர்களும், தொழில்வளம் இருந்தால் மீண்டும் வந்து தொழில் செய்யலாம் என்று எண்ணி, படகுகளை அந்த, அந்த துறைமுகங்களிலேயே நிறுத்திவிட்டு தங்கள் ஊர்களுக்கு வந்து விட்டார்கள்.
இதனால் பொதுமுடக்கத்துக்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் செல்லும் மீனவர்களும் தொழிலுக்குப் போக முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.
இப்பொழுது பொதுமுடக்கம் வந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இதனால் பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் கேரளாவில் நிறுத்திவைத்திருக்கும் விசைப்படகைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைப்படகுகளின் புல்டக் பகுதி ( நடக்கும் மேல் பகுதி) பல பலகைகளால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும். அதன் இணைப்புகளில் தண்ணீர் இறங்காத வண்ணம் பஞ்சு திணிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும். அதிக நாட்கள் படகை அப்படியே நிறுத்திவைத்தால் இந்த பஞ்சு இளகிப் போய், பலகைகளின் இணைப்புகளிலிருந்து தண்ணீர் உள் பகுதியில் இறங்கி நிரம்பி.. இன்ஜின் மூழ்கி, தொடர்ந்து படகும் மூழ்கும் நிலை உருவாகும். சாதாரணமாக இப்படி நிறுத்திவைத்திருக்கும் படகுகளை, அவ்வப்போது அங்கு சென்று கவனித்துப் பராமரிப்பது வழக்கம்.
அதேபோல், படகுகள் இரும்பால் செய்யப்பட்டவை. அதில் இருக்கும் தொழில் கருவிகளும் பெரும்பாலும் இரும்பால் செய்யப்பட்ட உபகரணங்கள் என்பதால் நீண்ட நாட்கள் அப்படியே இருந்தால் உபகரணங்களும் துருப்பிடிக்கும் நிலை ஏற்படும். இது ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாக மீனவர்களுக்கு அமையும். அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு படகுகளை அங்கு சென்று பராமரித்து தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். ஐந்தாறு மாதங்களாக தொழிலுக்குச் செல்லமுடியாத விசைப்படகு மீனவர்களை கேரளாவில் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். இதேபோல், மீன்பிடித் தடைக்காலத்தை ரத்து செய்து அனைத்து மீனவர்களையும் தொழிலுக்குச் செல்ல அனுமதியளிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.