Published : 22 May 2020 09:52 AM
Last Updated : 22 May 2020 09:52 AM

ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிப்பு: தமிழக அரசு நடவடிக்கை

வேதா இல்லம் - ஜெயலலிதா: கோப்புப்படம்

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 22) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா நிலையம்' இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என,17.08.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, அந்த இல்லத்தைக் கையகப்படுத்த தமிழ் வளர்ச்சித்துறை 5.10.2017 அன்று நிர்வாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அந்த நிலம் மற்றும் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க அறிவிப்பு 28.06.2019 அன்று வெளியிடப்பட்டது. இதன்பின், 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது.

'வேதா நிலையம்' இல்லத்தில் உள்ள மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அதன் பராமரிப்புக்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்த இல்லம், மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பர்.

இந்த அறக்கட்டளை 'வேதா நிலையம்' இல்லத்தைப் பராமரிக்கவும், அங்குள்ள அனைத்து அசையும் சொத்துகளையும் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x