

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இயக்கப்படும் ‘சுவிதா’ சிறப்பு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் வசதிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
பிரீமியம் ரயில்களுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு இல்லாததால் டிக்கெட் ரத்து செய்வதற்கான வசதி உள்ளிட்ட புதிய விதிமுறைகளுடன் 'சுவிதா' என்ற பெயரில் ரயில்கள் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இந்த ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் 6 மணி நேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால், 50 சதவீத கட்டணத்தை திரும்பப் பெற முடியும். ஆனால், இந்த ரயிலில், காத்திருப்போர் பட்டியல் வசதி இருக்காது என ஏற்கெனவே விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகளவில் டிக்கெட் ரத்தானால், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். இதற்கு தீர்வாக, ‘சுவிதா' சிறப்பு ரயிலில் காத்திருப்போர் பட்டியல் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட வகுப்பில் உள்ள மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக 10 சதவீதம் வரை காத்திருப்போர் பட்டியல் இருக்க ரயில்வே வாரியம் அனுமதி தந்துள்ளது. இதற்கான உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே வாரியம் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.