

தொடக்கத்தில் கரோனா தடுப்பு பணிகளில் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்காதது மற்றும் ஆலோசனைகளை ஏற்காததால் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது கரோனா வைரஸ். ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், கட்டுக்குள் இருந்த வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போதைய நிலை யில் தமிழகத்தில் வைரஸ் தொற்றின் பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துவிட்டது. சென்னையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிக மானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதற்கிடையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், மாத்தி ரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகளை கொடுத்து வீடுகளில் தனிமைப் படுத்து கின்றனர். இதனால், அவர் மூலம் குடும்பத்தில் மற்றவர்களுக்கும், அருகில் வசிப்பவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
தலையீடுகள் அதிகம்
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழகத்தில் வைரஸ் தொற்றின் பாதிப்பு எல்லை மீறி சென்றுவிட்டது. ஆரம்பத்தில் அனுபவம் வாய்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கூறிய ஆலோசனைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ப லரின் தலையீடுகள் அதிக மாக இருந்தது. இதனால், அதிகாரிகளால் முழுமையாக செயல்பட முடியவில்லை. முன்னெச்சரிக்கை தடுப்பு நட வடிக்கைகளை முழுமையாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுவே, தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் இந்த நிலைக்கு செல்ல முக்கிய காரணம்” என்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்துதல்
கரோனா வைரஸ் சிகிச்சை வார்டில் பணியாற்றும் டாக்டர் களிடம் கேட்ட போது, “கரோனா வைரஸ் சிகிச்சை வார்டை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைத்தது தவறானது. இதனால், இங்கு ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களுக்கு எளிதாக பரவும். அதேநேரத்தில் வீட்டிலும் தனிமைப்படுத்தக் கூடாது. இதற்கென தனியாக ஒரு சிகிச்சை மையத்தை தொடங்க வேண்டும்” என்றனர்.
வலுவான சுகாதார கட்டமைப்பு
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, “ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தமிழகம் வந்தனர். சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் அவர்களுக்கு சரியான முறையில் பரிசோதனை செய்யவில்லை. கரோனா வைரஸ் தொடர்பான உண்மையான பாதிப்புகளை மறைத்துவிட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டில் முறையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை.
உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பொது சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. ஆனால், அதனை கரோனா வைரஸ் தடுப்பு பணியில் சரியாக பயன்படுத்தவில்லை.
அதேநேரத்தில் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர் வசிக்கும் தெருவையும், அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதையும் சீல் வைப்பதால், அனைவரும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் வசிக்கும் வீட்டையும், அவரது குடும்பத்தினரையும் மட்டுமே தனிமைப்படுத்தினாலே போதும். மருத்துவமனைகளில் இடம் இல்லை என்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க அனுமதிப்பதும் அங்கே உள்ள அனைவரையும் அடைத்து வைப்பதும் அரசின் தவறான அணுகுமுறையாகும்” என்றனர்.