

1600 உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓசூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1600 பேரை சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று ஓசூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
பயணிகளுக்கு முகக்கவசம், உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பழரசம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு ரயில் ஓசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூரு வழியாக உத்தரப்பிரதேசம் சென்றடைகிறது என்று ஓசூர் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்று தொழிலாளர்களை ரயிலில் வழியனுப்பி வைத்தனர்.
பிஹாருக்கு அனுப்பி வைப்பு
பிஹார் மாநிலம் சமஸ்திபூருக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 1,464 தொழிலாளர்கள் செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 860 பேர், கரூர் மாவட்டத்தில் இருந்து 604 பேரும் செல்கின்றனர். நாமக்கல்லில் இருந்து செல்பவர்களில் 137 பேர் மாணவர்கள். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் அனுப்பப்படுகின்றனர்.
இதுபோல அவர்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கொல்கத்தா, ஒடிசா, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 600 பேர் சென்றுள்ளனர். இன்னும் 1,300 பேர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஓரிரு வாரங்களில் அவர்களும் அனுப்பப்படுவர். பிற மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு ஆயிரம் பேர் வந்துள்ளனர். இதில், கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் இருந்து மட்டும் 700 பேர் வந்துள்ளனர். இன்னும் 5 தினங்கள் கரோனா தொற்று எதுவும் வரவில்லை எனில் நாமக்கல் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்தார்.