Published : 22 May 2020 07:26 AM
Last Updated : 22 May 2020 07:26 AM

‘தி இந்து’ உள்ளிட்ட பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகள் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை

‘தி இந்து’ உள்ளிட்ட பத்திரிகைகள் மீது அரசு தரப்பில் தொடரப்பட்ட 28 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012, 13 மற்றும் 2014 ஆகிய காலகட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அமைச்சர்கள், தமிழக அரசு குறித்தும், ஜெயலலிதாவை விமர்சித்து எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை குறித்தும் செய்தி வெளியிட்டதற்காக ‘தி இந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆகிய ஆங்கில நாளிதழ்கள் மீதும் தினமலர், தினகரன், தமிழ்முரசு, முரசொலி ஆகிய தமிழ் நாளிதழ்கள் மீதும், நக்கீரன் வார இதழ் மீதும் தமிழக அரசு சார்பில் 28 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி ‘தி இந்து’ தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன் ஆகியோரும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், நக்கீரன் தரப்பில் கோபால், தினமலர் சார்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.லட்சுமிபதி, தினகரன் மற்றும் தமிழ்முரசு தரப்பில் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், முரசொலி தரப்பில் எஸ்.செல்வம் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நடந்தது. ‘தி இந்து’ குழுமம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் எம்.எஸ்.முரளி ஆகியோர், ‘‘பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்குகளை காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தொடர்ந்துள்ளது. அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வெளியிட்ட செய்திக்கெல்லாம் குற்றவியல் சட்டப் பிரிவின்கீழ் அவதூறு வழக்கு தொடர முடியாது.

இதன்மூலம் அரசு வழக்கறிஞருக்கான கடமை மீறப்பட்டு, அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜனநாயக ரீதியிலான கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டப் பிரிவுகளை இந்த அரசும் கடைபிடித்து வருகிறது. எனவே, மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் செயல்படும் பத்திரிகைகள் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர்.

இதேபோல நக்கீரன் தரப்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், முரசொலி தரப்பில் வழக்கறிஞர் பி.குமரேசன் உள்ளிட்டோர் ஆஜராகி, ‘பத்திரிகைகள் தனிப்பட்ட ஒரு நபரை விமர்சித்து செய்தியோ, கருத்துகளையோ வெளியிட்டு இருந்தாலும், அரசின் செலவில் அரசு வழக்கறிஞரின் மூலமாகவே இந்த அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள சுதந்திரமான பேச்சு மற்றும் வெளிப்பாட்டுக்கான அடிப்படை உரிமையும் பாதிக்கப்படுகிறது’’ என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் நேற்று பிறப்பித்துள்ள 152 பக்க விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

‘சத்யமேவ ஜயதே’ என்பது.. அதாவது, ‘வாய்மையே வெல்லும்’ என்பதே நமது நாட்டின் தாரக மந்திரம். தேசிய கீதம், தேசிய கொடிக்கு மதிப்பளிக்கும் நாம், அந்த தாரக மந்திரத்துக்கு மதிப்பளிக்க தவறுகிறோம். ஜனநாயகத்தை நிலைநாட்ட அந்த தாரக மந்திரம்தான் அடிப்படை.

நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகள், ஜனநாயகத்தின் காவலர்களாகவும் திகழ்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டை வலுவாக கட்டமைப்பதற்கும் பத்திரிகைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்திய ஊடகங்கள் மிகவும் மதிப்பிற்குரியவை.

பத்திரிகைகளின் ஒரே நோக்கம் சேவையாற்றுவதே என தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளும் குறிப்பிட்டுள்ளார். அதை மனதில் கொண்டு பத்திரிகைகள் அடுத்த தலைமுறையின் மேம்பாட்டுக்கு துணை நிற்க வேண்டும். அவதூறு என்பதற்கான பதம் என்ன என்பதை பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பாக இந்த பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 199(2) ன்கீழ் இந்த வழக்குகளை அவதூறு வழக்குகளாக தொடருவதற்கு எந்தவொரு அடிப்படை முகாந்திரமும் இல்லை. குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 199(6)ன்கீழ் மட்டுமே அவதூறு வழக்கு தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அதை அரசு செய்யவில்லை. எனவே, இந்த அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x