

ஊரடங்கால் சிறப்பு பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் செயல்படாததால் சிறப்புக் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் சிறப்புக் குழந்தைகளிடம் தேவையற்று சிரிப்பது, கைதட்டுவது போன்ற தேவையற்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
ஊரடங்கு காலத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு, ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் செயல்முறை மருத்துவராக பணியாற்றி வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருண்குமார், தன் நண்பர்களான செயல்முறை மருத்துவர்கள் 4 பேருடன் இணைந்து சிறப்பு குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்க, ‘நண்பர்களின் வாழ்வு மற்றும் மறுவாழ்வு சேவை’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார்.
இவர்களைத் தொடர்பு கொள்ளும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் கூறும் பிரச்சினைகளைக் கேட்டு தொலைபேசியில் இலவசமாக ஆலோசனை வழங்குகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகளை செய்முறை வீடியோ பதிவுகளாக இ-மெயில், வாட்ஸ் அப்-ல் அனுப்பி பெற்றோருக்கு உதவி வருகின்றனர். இதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் கூறியதாவது:
ஊரடங்கால் சிறப்பு குழந்தைகள் செயல்முறை மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சி பெற முடியாததால் அவர்களின் செயல்பாடு மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த சேவையைத் தொடங்கினோம். இதுகுறித்து, வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பதிவிட்டோம். எங்களை தொடர்புகொண்ட சிறப்பு குழந்தைகளின் பெற்றோரிடம் அவர்களுடைய குழந்தைகளின் பிரச்சினை என்ன என்பதைக் கேட்டு ஆலோசனை வழங்குகிறோம். வீட்டிலேயே பயிற்சி அளிக்கவும் அறிவுரை வழங்குகிறோம். ஊரடங்குக்குப் பின்னரும் இந்த இலவச சேவையை தொடர முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு மருத்துவர் அருண்குமார் கூறினார்.