

கரோனா பாதிப்பால் தமிழக அரசின் வருவாய் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் அரசின் செலவினங் கள் 50 சதவீதம் குறைக்கப்படு கிறது. அலுவலக நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25 முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற் போதைய நிலைமையை கருத் தில்கொண்டு பல்வேறு துறை களில் வழக்கமான செலவினங் களை குறைக்க அரசு முடிவெடுத் துள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை யின்கீழ் தலைமைச் செயலர் க.சண்முகம் வெளியிட்ட அர சாணையில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு காரணமாக வருவாயில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்து, நிதி நெருக்கடியை குறைக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இந்த நிதி யாண்டுக்கான செலவினங்களில் சிலவற்றை குறைக்க முடிவெடுக் கப்பட்டுள்ளது.
அதன்படி, வழக்கமான அலு வலக செலவினங்களில் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. புதிய அலுவலகங்கள் திறத்தல் தவிர மற்றவற்றுக்காக இருக்கை உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. இதற்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 50 சதவீதம் குறைக் கப்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளி கடைபிடிக்கப் பட வேண்டும் என்பதால் விளம் பரம், கண்காட்சிகளை தவிர்ப்பதன் மூலம் 25 சதவீதம் செலவினம் குறைக்கப்படும்.
அலுவல் சார்ந்த அனைத்து மதிய உணவு, இரவு உணவு மற்றும் இதர கேளிக்கைகள் அடுத்த உத்தரவு வரும்வரை ரத்து செய் யப்படுகிறது. சுகாதாரம், தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், நிதியுதவி திட்டங்களின்கீழ் வாங் கப்படும் இயந்திரங்கள், கருவிகள் தவிர, மற்ற வகை இயந்திரங் கள், கருவிகள் கொள்முதல் ஓராண் டுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மருத்துவம், அவசர ஊர்தி, காவல் மற்றும் தீயணைப்புத் துறை, மிக முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கான வாகனங்கள் வாங்குவது அனுமதிக்கப்படும். இதுதவிர, புதிய வாகனங்கள் வாங்குவது முழுமையாக தடை செய்யப்படுகிறது.
கரோனா உள்ளிட்ட முக்கிய மான நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகள் தவிர மற்ற பயிற்சிகள், வெளிநாட்டு பயிற்சியில் பங்கேற் பது தவிர்க்கப்பட்டு, 50 சதவீதம் செலவினம் குறைக்கப்படுகிறது. பதிப்புக்கான செலவினங்கள் 25 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.
மிகவும் பழமையான கணினிகள், இயங்காத கணினிகள் மாற்றம் தவிர, புதிய கணினிகள், உதிரி பாகங்கள் வாங்க அனுமதிக்கப் படாது. துறை சார்ந்த பயணங்களை தவிர்த்து, ஆய்வுக் கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு செலவில் வெளிநாட்டு பயணம் அனுமதிக்கப்படாது. ரயில் கட்டணத்துக்கு சமமான அல்லது குறைவான கட்டணம் இல்லாத நிலையில் மாநிலத்துக்குள் விமான பயணம் அனுமதிக்கப்படாது. வெளிமாநில விமான பயணம் அனுமதிக்கப்படாது. மத்திய அரசு கூட்டங்களுக்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள் ளுறை ஆணையர் செல்ல அறிவுறுத்தப்படுவார்.
சில துறைகளில் குறிப்பிட்ட பணிகளுக்கு வழக்கமாக வழங் கப்படும் தினசரி படி, 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. பயணச் செலவை குறைக்கும் வகையில், பொது மாறுதல்கள் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இரு அதிகாரிகளுக்கு இடையிலான சுயவிருப்ப மாறுதல்கள் அனுமதிக்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல் கலைக்கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் பொது நிகழ்வு களில் பரிசுப்பொருள், பூங்கொத்து, சால்வை, நினைவுப்பரிசு உள்ளிட் டவை வழங்குவது அடுத்த உத் தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது. ஆய்வுக்கூட்டங்கள் தவிர அலுவலக நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட கூட்டம், கலை நிகழ்ச்சிகள், அதாவது 20 பேருக்குமேல் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஆகியவை அடுத்த உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
புதிய பணியிடங்களுக்கு தடை
நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:மாநிலத்தில் கரோனா பாதிப்பு காரணமாக செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக, அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. பணியாளர் கமிட்டியிடம் அனுமதி பெற்று, தொடக்க நிலையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு புதியவர்களை தேர்வு செய்தல் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர அனுமதிக்கப்படுகிறது. பதவி மூப்பு மற்றும் பணியிட மாறுதல் காரணமான ஆட்கள் தேர்வுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.