Published : 21 May 2020 10:39 PM
Last Updated : 21 May 2020 10:39 PM

10-ம் வகுப்பு  பொதுத்  தேர்வு எப்படி நடத்தப்படும்?- அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் நடைமுறைகள் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 8865 பள்ளிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 690 பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே, மார்ச் 27 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020 பருவத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் மார்ச் 26 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இது தவிர, மார்ச் 24 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

2. மேற்குறிப்பிட்ட பொதுத் தேர்வுகள் ஜூன் 01 முதல் நடத்தப்படும் எனவும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 முதல் தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைளை ஏற்று, ஜூன் 01 தொடங்க இருந்த பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

3. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ள மே 20 நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை(நிலை) எண் 246 இல் உத்தரவிடப்பட்டுள்ளது:

· கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை காரணமாக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு தேர்வுகள் நடத்திடும் நோக்கத்தின் அடிப்படையில், ஒரு தேர்வறைக்கு 20 தேர்வர்கள் தேர்வெழுதுவர் என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி ஒரு தேர்வறைக்கு 10 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவர்.

· அதற்கேற்ப, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அவரவர் பயிலும் பள்ளிகளையே தேர்வு மையமாக அமைத்து அந்தந்த பள்ளிகளிலேயே (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக) தேர்வர்கள் தேர்வு எழுதிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால், மாணவர்கள் அதிக தூரம் பயணம் செய்வதும் தவிர்க்கப்படும்.

· இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர்.

· மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,016 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 4384 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 7400 தேர்வு மையங்களில் 8.41 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுதுவர்.

· இது தவிர, மார்ச் 24 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் ஜூன் 18 அன்று அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்படும்

· இத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளன்று பயன்படுத்தும் பொருட்டு சுமார் 46.37 லட்சம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.

· தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் காலையில் பணி தொடங்குவதற்கு முன்னும் மற்றும் மாலையில் பணி நிறைவுற்ற பின்னும் சுத்தம் செய்யப்பட்டு போதிய அளவு கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

· தேர்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ((Containment Zone) இருப்பின் அத்தேர்வு மையங்களுக்கு மாற்று தேர்வு மையங்கள் (Alternate Examination Centres) அமைக்கப்படும்.

· நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் ((Special Examination Centres) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

· பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பயணம் செய்து வரும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு மட்டும் வீட்டு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்களிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதன்மை தேர்வு மையங்களிலேயே தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

· நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) வசிக்கும் மாணவர்கள் அவர்களின் அடையாள அட்டை மற்றும் தேர்விற்கான நுழைவுச் சீட்டின் அடிப்படையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியே செல்லவும் மற்றும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படுவர்

· சிறப்புத் தேர்வு மையங்களுக்கு சென்றுவர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும்.

· பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பணியில் சுமார் 1,65,969 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

· மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பீட்டு பணியில் சுமார் 43,592 ஆசிரியர்களும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் சுமார் 62,107 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

· மதிப்பீட்டு முகாம்களில் சமூக இடைவெளியை (Social Distance) பின்பற்றும் பொருட்டு, ஒரு அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் (CE), ஒரு கூர்ந்தாய்வாளர் (SO) மற்றும் ஆறு (6) உதவித் தேர்வாளர்கள் (AE) என மொத்தம் 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப மதிப்பீட்டு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.

· மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மையத்திற்கு வருகை புரியும்போது தங்களது கைகளை சோப்பு/ Hand Sanitizer கொண்டு சுத்தம் செய்வதற்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

· ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 5 தொடர்பு எண்கள் உதவி எண்களாக (Helpline) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி ((SMS) மூலமாக அனுப்பப்பட்டும், மாணவர்களின் தேர்வு நுழைவு சீட்டில் அச்சடித்தும் வழங்கப்படும். இதன் வாயிலாக மாணவர்கள் / பெற்றோர்கள் தங்கள் சந்தேகங்களை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

· வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் நலனுக்காக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 11 முதல் தேர்வு முடிவுறும் வரை அனைத்து வகை அரசு / தனியார் பள்ளி விடுதிகள் மற்றும் நலத்துறை விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

· அவ்வாறு செயல்படும் விடுதிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் / நிர்வாகங்கள் மூலம் தினமும் இருமுறை உரிய முறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.

· குறிப்பிட்ட தேதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்கள் / விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் சென்றுவர தேவையின் அடிப்படையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போதிய அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

· வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு சொந்த ஊருக்குத் திரும்ப வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card) அல்லது தேர்வு அனுமதி சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அம்மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் / பாதுகாவலர்கள் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள அவர்களது சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர்.

மேலும், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID card) அல்லது தேர்வு அனுமதிச் சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அவர்களையும் அவர்கள் பெற்றோர் / பாதுகாவலர்களையும் TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் அவர்களது பெற்றோர் மற்றும் காப்பாளர்களுடன் வந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இவ்விலக்கானது தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

· தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக தேர்வு நுழைவுச் சீட்டு ((Hall ticket) கணினி மூலம் பதிவிறக்கம் ((Online download) செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். மேலும் மாணவர்கள் இதனை பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்காண் இரு முறைகளிலும் நுழைவுச் சீட்டு பெற இயலாதவர்களுக்கு தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) வசிக்கும் மற்றும்

வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச் சீட்டு பெற அழைக்காமல் அவர்களது வீடுகளுக்குச் சென்று நுழைவுச் சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

· மாணவர்கள் வெளியூர் சென்றுள்ள இடம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக (Containment Zone) இருந்தால், அப்பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

எனினும், அத்தகைய மாணவர்களும், பெற்றோர்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதேபோல் மாணவர்கள் வெளியூரிலிருந்து சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் குடியிருப்பு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக (Containment Zone) இருந்தால், அவர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கான வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்படும்.

* மேற்காணும் தேர்வு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிமுறைகளைச் சார்ந்து மேற்கொள்ளப்படும்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x