Published : 21 May 2020 08:12 PM
Last Updated : 21 May 2020 08:12 PM

ஆசிரியருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள்: மதுரையில் நெகிழ வைத்த பள்ளிக் குழந்தைகள் 

அரசு உதவிபெறும் பள்ளியில் இலவசமாக நாடகக்கலையை கற்றுக்கொடுத்த ஆசிரியர் ஒருவருக்கு, அவரிடம் கற்ற பள்ளி குழந்தைகள் ‘கரோனா’ நிவாரண நிதி வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு நல்ல மனிதர்களை தொடர்ந்து சமூகத்திற்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. பெரும் வசதியும், வாய்ப்புகளும் இல்லாத நடுத்தர அடித்தட்டு மக்கள் கூட ‘கரோனா’வால் அச்சுறுத்தும் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அன்றாட வாழ்வாதாரத்திற்காக சேர்த்து வைத்த பணத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேருதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு அவரிடம் நாடகக் கலை கற்றுக் கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள் ‘கரோனா’ நிவாரணப் பொருட்களை வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியில் அரசு உதவிபெறும் காந்திஜி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த பள்ளியில், பள்ளிக் கல்வியைத் தாண்டி நாடகக்கலையின் வழியாக ஒழுக்கம், அறம் சார்ந்த நன்னெறி கல்வியை வழங்கி வருபவர் தன்னார்வலர் ஆசிரியர் செல்வம். பள்ளிக் குழந்தைகளை நடிக்க வைத்து அதன்மூலம் சமூகத்தை பற்றிய சிந்தனைகளை அவர்களிடம் வளர்த்தெடுத்து வருகிறார்.

அவர் அதற்காக அவர்களிடம் கட்டணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே 'நாடகக்கலை' மூலம் இந்த சேவையை செய்து வருகிறார். தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தனியார் பள்ளிகளில் கட்டணம் பெற்று இந்த வகுப்புகளை சொல்லிக் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் ‘கரோனா’ ஊரடங்கு நாடக ஆசிரியர் செல்வம் வாழ்க்கையும் முடக்கிப்போட்டுவிட்டது. தனியார் பள்ளிகள் திறக்கப்படாததால் வருமானம் இழந்து அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட இவரிடம் கற்ற காந்திஜி தொடக்கப் பள்ளி குழந்தைகள், தங்களது சேமிப்பிலிருந்து திரட்டிய தொகை ரூ.565 ஆசிரியர் செல்வத்திற்கு வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.

இந்த குழந்தைகளின் பெற்றோரும், அவர்களுடன் திரண்டு சென்று தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், பருப்பு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆசிரியர் செல்வத்தை அன்பு மழையில் நனைய வைத்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் செல்வத்திடம் பேசுகையில், ‘‘குழந்தைகளின் பேரண்பும், அவர்கள் பெற்றோருடைய ஆதரவும் என்னை பூரிப்படைய வைத்துள்ளது.

என்னுடைய நாடக கலை வாயிலாக ‘அறம் செய்ய விரும்பு’ என்று சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் அறம் செய்து காட்டியுள்ளனர். அதை இந்த சிறிய வயதில் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.

எதுவுமே இல்லாத அந்தக் குழந்தைகள் வழங்கியது சிறிய தொகையாக இருந்தாலும், எனக்கு உதவ வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் பலகோடி ரூபாய் அளவிற்கு பெரியது. எதிர்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆசிரியராக நான் நினைத்தனோ, அதற்கு இந்த நிகழ்வையே ஒரு சாட்சியாக உள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சந்தித்து நாடகக்கலை வாயிலாக நன்னெறி, அன்பு, மரியாதை சகிப்பு தன்மை சொல்லிக் கொடுத்து வருகிறேன். அதில் பயன் பெற்ற ஒரு சிறிய பகுதி குழந்தைகள்தான் இவர்கள். இவர்கள் இந்த சமூகத்திற்கு எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருப்பார்கள்.

இந்த குழந்தைகள் ஏற்கணவே கஜா புயலுக்கு நிவாரணம் வழங்கியுள்ளனர். இதுபோன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவத்திலே பள்ளிகள் எதுவமே திறக்கப்படாத இந்த சூழல்நிலையில் தங்கள் ஆசிரியர்கள் கஷ்டப்படுவாரே என்ற எண்ணத்தில் வீடு தேடி வந்து உதவி செய்துள்ளனர். அதனால், இந்த சமூகத்தில் எனக்கான பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இந்த குழந்தைகளின் அன்பு,

தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கான என்னுடைய இந்த பயணம் தொடருவதற்கு மற்றொரு உந்துசக்தியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x