

ஊரடங்கால் வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை செலுத்த தாமதம் செய்யும் நிறுவனங்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கக்கூடாது என கள அலுவலர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவுதல் மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வைப்பு நிதி சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் சரியான நேரத்தில் வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் தாமதத்தை சந்தா செலுத்தா நிலையாக கருதக்கூடாது என்றும், அந்த தாமதத்துக்கு அபராதத் தொகை வசூலிக்கக்கூடாது என்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி சந்தா தொகை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக அபராதத் தொகை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அனைத்து வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கள அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழ் வரும் 6.5 லட்சம் நிறுவனங்களுக்கு வைப்பு நிதி சட்டங்களை கடைபிடிக்கக்கூடிய முறைகள் எளிதாவதுடன், அபராத் தொகை செலுத்தும் பொறுப்பிலிருந்தும் காப்பாற்றப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.