

வாடகை நெருக்கடியால் தவிக்கும் சிறு, குறு தொழிற்கூடங்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டுமென்று குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:
"ஊடரங்கால் குறுந்தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழிற்கூடங்கள் வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 3 மாதங்களாக தொழில் நடைபெறாத நிலையில், தொழிற்கூடங்கள் மற்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தொழில்முனைவோர் தவிக்கின்றனர். அரசு சில தளர்வுகளை அறிவித்ததையொட்டி இடத்தின் உரிமையாளர்கள் தற்போது வாடகை கேட்டு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
முழுமையான ஊரடங்கு விலக்கு அறிவிக்காத நிலையில், தொழில்களும் முழு உற்பத்தியில் ஈடுபட முடியாமல், முடங்கியுள்ளன. மூலப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வராத நிலையில், உள்ளூர் மார்க்கெட்டில் மூலப் பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, குறுந்தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
வாடகை இடத்தில் தொழில் நடத்தி வரும் குறுந்தொழில் முனைவோருக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் ஒரு லட்சம் மானியத்துடன், 6 சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்க வேண்டும். இத்தொகையை திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். மூன்று மாதத்துக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களும், கடன்களைத் திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்குவதுடன், வட்டியை ரத்து செய்ய வேண்டும்"
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.