

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் கட்டிடத்தில் கரோனா சிறப்பு வார்டு அமைப்பதைக் காரணம் காட்டி வீடில்லாதவர்களுக்கான ஒதுக்கீடு உத்தரவுகளை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “வீடு இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கேசவப்பிள்ளை பூங்கா பகுதியில் 1970-ம் ஆண்டு குறைந்த வாடகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கட்டிடம் என்பதால் கடந்த 2018-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. ஓராண்டுக்குள் வீடு கட்டித் தரப்படும் என்ற அதிகாரிகளால் உறுதியளித்தும், வீடுகள் கட்டித் தராததால் மீண்டும் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பை பயனாளிகளுக்கு வழங்காமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாகப் பயன்படுத்த உள்ளதாக பயனாளிகள் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
கரோனா நோயாளிகளிக்குப் போதுமான மருத்துவமனை மற்றும் படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைக்கு மாறாக குடியிருப்புகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளன.
அதனால், இடைக்கால உத்தரவாக குடியிருப்புகளைச் சிகிச்சை மையமாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும். வீடுகள் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க குடிசை மாற்று வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், பி.டி ஆஷா அமர்வு, கரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்காக வீடுகள் ஒதுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும், சாலைகளில் வசிக்கும் மக்களை நேரில் ஆய்வு செய்து அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.