

சென்னையில் கரோனோ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வை எப்படி நடத்துவீர்கள் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள், பெற்றோர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன் இன்று (மே 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காரல்மார்க்ஸ், "சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூலை மாதம்தான் நடைபெறுகிறது. கல்லூரித் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுகிறது.
கரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த உள்ளது'' என்று குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சென்னையில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்தப் போகிறீர்கள், வெளியிலிருந்து எப்படி வர முடியும்?" என்று கேள்வி எழுப்பினர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, நோய் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகள், 11-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.