

தஞ்சாவூர் அருகே கரோனா ஊரடங்கு காலத்தில், பல ஆண்டுகளாக பயனற்றுல் கிடந்த 15க்கும் மேற்பட்ட கிணறுகளை தூர்வாரி, பாசனத்துக்காக தயார்படுத்தியுள்ளனர் விவசாயிகள்.
தஞ்சாவூர் ஒன்றியம் வேங்கராயன்குடிக்காடு கிராமம் மானாவாரி பகுதியாகும். இப்பகுதியில் ஆற்றுப் பாசனம் கிடையாது. இருப்பினும் போர்வெல், மழை, கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு வாழை, சோளம், கடலை, உளுந்து, கரும்பு என 200 ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதால், கிணறுகளின் பயன்பாடு குறைந்து போனது. இதனால், கிணறுகள் தூர்ந்து போய் மண்மேடாக மாறியது. கிணற்றில் தண்ணீர் குறைந்ததால், சாகுபடி பரப்பளவும் குறைந்தது.
கரோனா ஊரடங்கால் கூலி வேலைக்குச் சென்றவர்கள் பலரும் வாழ்வாதாரம் இன்றி முடங்கிக் கிடந்தனர். இதையடுத்து கிராம மக்கள் அவர்களுக்கு சம்பளத்துடன், ஒரு வேலை உணவுடன், கிராமத்தில் வீணாகிக் கிடக்கும் கிணறுகளைத் தூர்வார முடிவு செய்தனர்.
முதலில், கதிர்செல்வன் என்ற விவசாயி கிணற்றைத் தூர்வார, மண்ணால் மூடப்பட்டுக் கிடந்த கிணற்றைத் தூர்வாரிட முன்வந்தார். இதையடுத்து நாகராஜன், உத்திரபதி, துரைமாணிக்கம், ஆனந்த், ஜெயராமன் என அடுத்தத்த விவசாயிகள் கிணற்றைத் தூர்வாரத் திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கினர்.
கடந்த ஒரு மாத காலமாக 15க்கும் மேற்பட்ட கிணறுகள் தூர்வாரப்பட்டு, தண்ணீர் வரத் தொடங்கியுள்ளன. மேலும், மழை பெய்தால் அதிக அளவில் தண்ணீர் கிடைக்கும் என்கிறனர் கிராம மக்கள்.
இதுகுறித்து விவசாயி ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
"மானாவாரி பகுதியான எங்கள் கிராமத்தில், ஆரம்பக் காலகட்டத்தில் கிணறுகளுக்கு முக்கியத்துவம் இருந்துள்ளது. அதன் பிறகு பம்புசெட் வந்த பிறகு, கிணற்றின் தேவைகள் குறைந்துவிட்டன. ஒரு சிலர் மட்டுமே கிணற்றில் உள்ள நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு மழை ஓரளவுக்குப் பெய்த நிலையில், பயனற்ற கிணறுகளைத் தூர்வார முடிவு செய்தோம். தற்போது கட்டிட வேலை, கூலி வேலைக்குச் செல்பவர்கள் பலரும் வீட்டில் வேலையின்றி இருந்தவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு தினமும் 600 ரூபாய் சம்பளத்துடன், மதிய உணவு வழங்கித் தூர்வாரும் பணிகளை முடித்தோம்.
இதில் வேலையின்றி தவித்தவர்களுக்கு வருமானமும் கிடைத்தது. கிணறுகளும் முழுமையாக வெட்டி முடிக்கப்பட்டு விட்டன. கிணறுகளில் தண்ணீர் ஊற்றுப் பெருக்கெடுத்து வருவதால் விவசாயப் பணிகளும் தொடங்கியுள்ளன".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.