பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தளர்வு

பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தளர்வு
Updated on
1 min read

நாகர்கோவிலில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் வசிக்ம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நாகர்கோவில் தளவாய்புரம், சேகவன்திருப்பபுரம், சந்தோஷ்நகர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததை தொடர்ந்தும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் ஆகி தொற்று இல்லாத நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சந்தோஷ்நகர் பகுதி மக்கள் தடுப்புகளை அகற்றி தளர்வு செய்யுமாறு போராட்டம் நடத்தியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நாகர்கோவிலில் கரோனா அச்சம் நீங்கிய பகுதிகளில் நேற்று தடைகள் தளர்த்தப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் அலுவலர்கள் சந்தோஷ்நகர், தளவாய்புரம் உட்பட சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தடைகளை அகற்றினர்.

அப்பகுதிகள் தளர்வு செய்யப்பட்டதால் சகஜ நிலைக்கு திரும்பியது. அதே நேரம் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு, மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வருமாறும் வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in