

சென்னையிலுள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிய திருநெல்வேலியிலிருந்து 200 தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு தொழில்நிறுவனங்களும் அரசு விதிமுறைகளை பின்பற்றி செயல்பட தொடங்கியிருக்கின்றன.
சென்னையில் அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
இந்நிறுவனங்களில் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்தனர். ஊரடங்குக்குமுன் இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியிருந்தனர்.
தற்போது தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அழைத்து செல்வதற்காக அரசு அனுமதியுடன் திருநெல்வேலிக்கு அந்நிறுவனங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று வந்திருந்தன.
இப்பேருந்துகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.