

குமரியில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த காசி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்நிலையில் காசியைப் குமரி மகளிர் காவல் நிலைய போலீஸார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.
மேலும் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக அவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது ஏராளமான பெண்கள் பாலியல் தொல்லை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கடுக்காக கொடுத்தனர். இதனை தொடர்ந்து குமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட காசியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரது லேப்டாப், மொபைலில் இருந்து ஏராளமான பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை போலீசார் கைப்பற்றினர். காசி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
காசி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, காசியை 6 நாள் காவலில் எடுத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் காசி தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் காசி வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்தவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய மாதர் சங்க குமரி மாவட்ட தலைவர் உஷாபாஷி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.