தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: சமூகநீதி - இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படும்; வீரமணி

கி.வீரமணி: கோப்புப்படம்
கி.வீரமணி: கோப்புப்படம்
Updated on
2 min read

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமானால், சமூகநீதி - இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்படும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்று கொடூரத்தைப் பயன்படுத்தி மத்தியில் உள்ள பாஜக அரசு, கரோனா தடுப்பு நிவாரணம், பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை, மக்களைக் காப்பாற்ற புதிய திட்டங்கள் என்ற பெயரால், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை வெறும் பெயரளவில் செயல்படும் முனிசிபாலிட்டிகளைப் போல ஆக்கும் பணி, மிக லாவகமாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது.

மறுபுறத்தில் தற்சார்பு என்ற பெயரால், ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் எதையெல்லாம் தங்களது அரசியல் பொருளாதாரத் திட்டங்களாக ஆக்கிட வேண்டுமென்று நினைத்திருந்ததோ, அவற்றையெல்லாம் மிகமிக அவசரமாக, 20 லட்சம் கோடி ரூபாய் என்ற நிவாரணப் போர்வைக்குள் வைத்து வெளியிடுகின்றது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் விவாதத்தையேகூட தவிர்த்திடும் யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது.

'தோலிருக்க சுளை முழுங்கி' என்பதுபோல...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் அரசுகளின் அடிப்படை இலக்கு,கொள்கை, முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்று வலியுறுத்தியுள்ள நிலையில், அதன் பெயரில் உறுதி மொழி எடுத்து ஆட்சி செய்யும் ஓர் அரசு, அதனை நடைமுறையில் ஒழிக்கும் வகையில், 'தோலிருக்க சுளை முழுங்கி' என்பதுபோல, அதன் அடிப்படை லட்சியங்களுக்கு நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டினைச் செயல்படுத்த இந்தச் சூழலைப் பயன்படுத்துகிறது.

அரசின் சமதர்ம அடிப்படைக்கு ஏற்ப நீண்ட நெடுங்காலமாக இருந்த நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி என்பதும், அடிக்கட்டுமானம் என்பதும் பொதுத் துறை, கூட்டுத் துறை, தனியார்த் துறை ஆகிய மூன்றாக இருந்து வந்தன.

பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில்...

பல பொதுத் துறை நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் அதிலும் லாபம் வரும் நிறுவனங்களின் பங்குகளையும்கூட தனியாருக்கு விற்று விடும் நிலை, வாஜ்பாய் பிரதமராக வந்த காலத்தில் தொடங்கியது; அருண்ஷோரி ஒரு தனி அமைச்சகத்தின் துறை அமைச்சராகவே இருந்து வந்தார்.

பிரதமர் மோடி தலைமையில் ஆறாவது ஆண்டுகால ஆட்சியில், அது வெகு பட்டாங்கமாய் தனியார் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே அரசின் ராணுவம் போன்ற பல துறைகளும் தனியார்மய அறிவிப்புக்கு ஆளாகியுள்ளது.

'ஜெட்' வேகத்தில் தனியார் மயம்!

தனியார் மயம், கரோனா நிவாரணம் என்ற சாக்கில் மிகவும் 'ஜெட்' வேகத்தில் அறிவிக்கப்படுகிறது!
எடுத்துக்காட்டாக,

1. 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

2. அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்க பாக்சைட், நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

3. கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி.

4. ராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு

5. இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.

6. இந்தியாவிலுள்ள மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

7. இவை எல்லாவற்றிற்கும் மேலான கொடுமை என்ன தெரியுமா?

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். (இது ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைக்கும் துவக்கம் போல, மற்ற மாநிலங்களிலும் அடுத்த கட்டம், இதை ஏற்று, தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம், தந்திரம் உள்ளே புதைந்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.

8. விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

9. இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

10. அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்.

அப்துல் கலாமால் பயனுறு வகையில் செயல்படும் டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோ போன்ற அரசின் முக்கிய ஆய்வு அமைப்புகள் இனி தனிப்பட்ட பெருமுதலாளிகளிடம் சிக்கினால், இந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் விளைவு என்னவாகும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி.

பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதில் ஏதோ பொருளாதார லாபம் மட்டும் தனியாரான கார்ப்பரேட் முதலாளிக்குப் போகிறது என்பதுதான் பலருக்குத் தெரிந்த ஒன்று.

சமூகநீதி - இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய அபாயம்!

அதைவிட மிகப்பெரிய ஆபத்து, சமூகநீதி, இட ஒதுக்கீடு, தனியார் மயமானால் அறவே கிடையாது என்பதால், எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. போன்ற பல்வகை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தற்போது அளிக்கப்பட்டு வருவது தானே காணாமல் போகும், இது மிகப்பெரிய அபாயம், பச்சையான சமூகநீதி பறிமுதல்.

இதனால், பட்டாங்கமாய், சட்டபூர்வமாகவே ஆகும் என்பதால், 'சர்வம் தனியார் மயம் ஜகத்' என்பதால், இதுதான் பலன், இதனை நாடு தழுவிய அளவில் மக்களிடம் எதிர்க்கட்சிகளோ, நடுநிலையாளர்களோ எடுத்துச் சொல்ல முடியாத நிலை, ஊரடங்கு, தடை எல்லாம் இப்போது, அந்த வசதியும் பயன்படுத்தப்படுகிறது!

மக்களுக்கு விளக்கத் தயங்கக் கூடாது!

எப்படி காரியங்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றன பார்த்தீர்களா? இதனை அனைத்து முற்போக்காளர்களும், அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பாளர்களும், உண்மையான ஜனநாயகவாதிகளும் ஒருங்கிணைந்து, இந்த சமூகநீதி பறிப்பை சோஷலிச கபளீகரத்தை தடுத்து நிறுத்த முயல வேண்டும்; இதை பொதுமக்களுக்கு விளக்கத் தயங்கக் கூடாது!

'எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதே நாம், நம் சுதந்திரத்திற்குத் தரும் உரிய விலையாகும்' என்ற பழமொழி நினைவில் இருக்கட்டும்"

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in