

மதுரையில் ‘கரோனா’ பரவலைத் தடுக்க அந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமில்லாது 100 வார்டு மக்களுக்கும் நேரடியாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் மாநகராட்சி ‘கபசுர குடிநீர்’ வழங்கி வருகிறது.
இதற்காக, மாநகராட்சி தினமும் அதற்காக ஆட்களை நியமித்து, ‘கபசுர குடிநீரை’ அண்டா, அண்டாவாகத் தயார் செய்து விநியோகம் செய்கிறது.
மதுரை மாநகராட்சியில் ‘கரோனா’ பாதிக்கப்பட்ட பகுதிகளில் பகுதிகள் தடைசெய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் வீடு, வீடாக மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறது.
மாநகராட்சியில் மொத்தம் 4 லட்சம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் மாநகராட்சி நிர்வாகம், நேரடியாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் ‘கபசுர குடிநீரை’ தயார் செய்துவிநியோகம் செய்கிறது. இதற்காக, மாநகராட்சி நிர்வாகம், அண்டா, அண்டாவாக கபசுர குடிநீரை தயார் செய்து வருகிறது.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது: மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குடிசைப் பகுதி மக்களுக்கும் கபசுர குடிநீர் சூரணம் பொடி, வைட்டமின் சி ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி மட்டும் இந்த மாத்திரைகளை நேரடியாக ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வழங்குகிறது. மற்ற குடும்பங்களுக்கு அந்தந்த குடியிருப்பு சங்கங்கள், தன்னார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் வழங்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 18ம் தேதி வரை வரை 1,54,460 லிட்டர் கபசுர குடிநீரை 30 லட்சம் நபர்களுக்கு வழங்கி உள்ளோம்.
இதற்காக ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி வீதியார் மேல்நிலைப் பள்ளியிலும், மடீட்சியா அரங்கிலும், வில்லாபுரம் மைமதுரை பள்ளி மைதானத்திலும், டி.வி.எஸ்.நகர் மைமதுரை பள்ளி மைதானத்திலும் கபசுர குடிநீர் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோம் செய்யப்பட்டு வருகிறது ’’ என்றார்.