

வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் தமிழகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், நான்கு வழிச்சாலை மற்றும் உயர்மட்ட மேம்பாலம் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.
அதனால், மத்திய, மாநில அரசுகளுக்கும், அந்தப் பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த காலத்தில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஓசூர், ஈரோடு மற்றும் சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் மட்டுமே வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். குறைவான ஊதியத்தில் அதிக திறன் கொண்ட நிறைவான வேலை பார்க்கும் இவர்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு ஏற்பட்டது.
அதனால், தொழில் நகரங்களைத் தாண்டி தற்போது மற்ற நகரங்களிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சிகளில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், அனைத்து மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் சாலைப்பணிகள், உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டுமானப்பணிகளில் தற்போது பெரும்பாலும் மேற்கு வங்காளம், பிஹார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களே அதிகம் பணிபுரின்றனர்.
மதுரையில் மட்டுமே ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள், காளவாசல் உயர் மட்ட மேம்பாலம், நத்தம் பறக்கும் பாலம், தற்போது தொடங்கப்பட்டுள்ள குருவிக்காரன் சாலை உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டுமானத்திட்டங்களிலும் வடமாநிலத் தொழிலாளர்களை கொண்டே நடந்தது.
மாநகராட்சி சார்பில் நடக்கும் பணிகளில் மட்டுமே சுமார் 270 வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தோடு மதுரையில் தங்கியிருந்து பணிபுரிந்தனர். அதுபோல், தனியார் கட்டுமான நிறுவனங்கள், குவாரிகள், நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் முதல் சாதாரண சாலையோர ஹோட்டல்கள் வரை வடமாநில தொழிலாளர்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்துவந்தனர்.
இவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் சொந்த ஊர் செல்ல பதிவு செய்துள்ளனர். நகர்புறங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே தற்போது ஆங்காங்கே தங்கியுள்ளனர்.
அவர்களுக்கான தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவைகளை அந்த அரசு நிறுவனங்கள், அதில் டெண்டர் எடுத்த கான்டிராக்டர்கள், ஹோட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தாலும் தற்போதைய அசாதாரண காலத்தில் அவர்கள் மனம் சொந்த ஊர்களுக்கு செல்லவே துடிக்கின்றது.
ஏற்கெனவே மதுரையில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கடந்த 2 மாதமாக ‘கரோனா’ ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த வாரம்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும், உயர் மட்ட மேம்பாலம் பணிகளும் மீண்டும் தொடங்கியது.
தற்போது இப்பணிகளில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு வர ஆர்வம் காட்டாததால் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்படும் அபாயம் உள்ளது. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் நிலவுவதால் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் முடிய நீண்ட காலதாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
அதனால், பணிகளை இன்னும் கால நீட்டிப்பு செய்யும்பட்சத்தில் அதற்கான திட்ட மதிபீடு அதிகரிக்கும் என்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கும், அப்பணிகளை டெண்டர் எடுத்த தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தற்போது சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ‘கரோனா’ முடிவுக்கு வரும்நிலையில் விரைவில் ஊரடங்கு தளர்வு அமுல்படுத்தும்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வர 2 மாதமாக வாய்ப்புள்ளது.
அதனால், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் தொழில் நகரங்கள் மட்டுமில்லாது மற்ற நகரங்களில் நடக்கும் கட்டுமானம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.