'மின்வெட்டுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்’: சிவகங்கை மாவட்டத்தைக் கைவிட்டது மின்வாரியம்

'மின்வெட்டுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்’: சிவகங்கை மாவட்டத்தைக் கைவிட்டது மின்வாரியம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் என மாறி, மாறி பரிந்துரை செய்தும் மின்வெட்டை சரிசெய்ய மின்வாரியம் தயாராக இல்லாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகங்கை துணை மின்நிலையத்தில் ஜன.14-ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் மொத்தமுள்ள மூன்று பவர் டிரான்ஸ்பார்ம்களில் 2 எரிந்தன. ஐந்து மாதங்களாக ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் சிவகங்கை பகுதியில் முழுமையாக மின்விநியோகம் செய்ய முடியவில்லை.

இதையடுத்து சிவகங்கை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மதகுபட்டி, காளையார்கோவில், மானாமதுரை, பூவந்தி, இடையமேலூர் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த மாதம் மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு டிரான்ஸ்பார்மும் வெடித்தது. இதையடுத்து அப்பகுதிக்கும் காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் இருந்தே மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் சிவகங்கை, மதகுபட்டி, காளையார்கோவில், மறவமங்கலம், மானாமதுரை, பூவந்தி, இடையமேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

கரோனாவால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு தொடர் மின்வெட்டு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பம்புசெட் மோட்டார்களும் இயக்க முடியாததால் பல நூறு ஏக்கரில் கோடை விவசாயமும் முடங்கியுள்ளது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள், சிறு,குறு நிறுவனங்கள் திறக்கப்பட்டு வரும்நிலையில், மின்வெட்டு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தொழிலை தொடங்க முடியாதநிலை உள்ளது.

மின்வெட்டை சீர்செய்ய அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் மாறி, மாறி பரிந்துரை செய்தும் மின்வாரியம் கண்டுகொள்ளாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய பணியாளர்கள் சிலர் கூறியதாவது: பெயரளவில் தான் தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று கூறி கொள்கின்றனர். தேவையான ஊழியர்கள், தளவாடப் பொருட்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

சென்னையில் உள்ள உயரதிகாரிகள் சிவகங்கை மாவட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற பழுதுகள் ஏற்பட்டதால் உடனடியாக டிரான்ஸ்பார்ம்களை அனுப்பிவிடுகின்றனர்.

அரசியல் அழுத்தம் இருந்தால் மட்டுமே மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான மின்வாரிய அதிகாரிகள் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இதனால் எந்த பிரச்சினையும் உடனுக்குடன் தீர்க்கப்படுவதில்லை,’ என்று கூறினர்.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இதுகுறித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டோம்,’ என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in