

தேனி மாவட்டத்தில் கரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் சமீபத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மேலும், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மரணித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வருபவர்களை, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்படுள்ளது.
அதன் அடிப்படையில், காடுரோடு சோதனைச் சாவடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனையில் கரோனா தொற்று இல்லையென்றால், 14 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதே நேரம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு பரொசோதனையில் கரோனா தொற்று இல்லையென்றால், மாவட்ட நிர்வாகத்தில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டம் பாலகோம்பையைச் சேர்ந் வேலுச்சாமி (வயது 45). இவர், கடந்த மே 19-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேனி வந்துள்ளார். கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
அதனையடுத்து, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு வேலுச்சாமி அழைத்துச் செல்லப்பட்டு, தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை, வேலுச்சாமிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு, கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை போகும் வழியில் அவர் உயிர் பிரிந்ததது.