

நான்காம் கட்டப் பொதுமுடக்கம் நீடிப்பதால் தமிழ்நாட்டில் இன்னும் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்து சேவைகள் தொடங்கப்படவில்லை. ஆனால், இன்று முதல் புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து ஒன்று தமிழகப் பகுதிகள் வழியாகச் சென்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. நேற்று புதுவை பகுதியில் மட்டும் இயங்கிய நிலையில், புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியான காரைக்காலுக்கும் இன்று போக்குவரத்து தொடங்கப்பட்டது.
புதுவையிலிருந்து காரைக்காலுக்குச் செல்ல தமிழகத்தின் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அதனால், தமிழகப் பகுதிகள் வழியாக பேருந்துகளை இயக்க இரண்டு மாவட்ட ஆட்சியர்களிடமும் முறைப்படி அனுமதி பெறப்பட்டு இன்று காலை புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தனிமனித இடைவெளியுடன் பயணிகள் பேருந்துகள் ஒன்று இயக்கப்பட்டது.
தமிழகப் பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் அங்கு புறப்படும் பேருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி என்று எங்கும் இடையில் நில்லாமல் நேரடியாக காரைக்கால் சென்றடைகிறது.
பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு சுத்தம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் 32 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.
பேருந்து புறப்படுவதற்கு முன்பு, காரைக்கால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாறன், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமிழகப் பகுதிகளில் இறங்கக்கூடாது எனவும் பயணிகளை அறிவுறுத்தினார்.
பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.