Published : 09 Aug 2015 10:36 AM
Last Updated : 09 Aug 2015 10:36 AM

கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு நிறைவடைந்தது: அக்டோபர் முதல் வாரத்தில் வகுப்புகள்

கால்நடை மருத்துவ படிப்புகளுக் கான கலந்தாய்வு முடி வடைந்தது. முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகின்றன.

இளநிலை கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி), பிடெக் (உணவு தொழில்நுட்பம்), பிடெக் (பால்வள தொழில்நுட்பம்), பிடெக் (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்பு களுக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த 6-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது. பிவிஎஸ்சி படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல் நாளில் நடந்தது. இதர பிரிவினருக்கு மறுநாள் (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற தருமபுரி மாணவி கே.ஜோதிமீனா, 2-ம் இடம் பெற்ற ஈரோடு மாணவர் எம்.சசி ஆனந்த் உட்பட 16 பேருக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரசு செயலாளர் டாக்டர் எஸ்.விஜயகுமார், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எம்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடைசி நாளான நேற்று பி.டெக். படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வு குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறும்போது, “மாநில ஒதுக்கீட்டுக்கான அனைத்து இடங்களும் கிட்டதட்ட நிரம்பிவிட்டன.

2-வது கட்ட கலந்தாய்வு?

காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். முதல் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x