

சிகிச்சை பெற்ற தொற்றாளர்கள் அனைவரும் குணமடைந்ததால் தருமபுரி மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கரோனா தொற்று பரவி வந்த நிலையில் தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டும் தொற்று இல்லாத மாவட்டங்களாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மொரப்பூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது லாரி ஓட்டுநர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் 14 நாள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து அவர் வீடு திரும்பினார். இதன் பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய 3 தொழிலாளிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது அடுத்தடுத்து தெரிய வந்தது. இவர்கள் சேலம், தருமபுரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில்,அரூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் காவலர், சென்னையில் பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்த அவர் நேற்று மாலை வீடு திரும்பினார். அவரை மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையிலான அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனவே, நேற்று மாலையுடன் தருமபுரி மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.
பச்சை மண்டலம்
கடந்த 11-ம் தேதிக்கு பின்னர் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இறுதியாக பெண் காவலருக்கு தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து 14 நாட்கள் வரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற நிலை நீடித்தால் அதன் பின்னர் தருமபுரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும்.