Published : 21 May 2020 07:05 AM
Last Updated : 21 May 2020 07:05 AM

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களுக்கான களப்பணி குழுக்கள் திருத்தியமைப்பு: சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி குழு அமைப்பு

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான சிறப்பு களப்பணிக் குழுக்களை திருத்தி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்புதொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு களப்பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தமிழகத்தில் 38 மாவட்டங்களும் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் சென்னை மண்டலத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரகுமார், ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ்குமார்நியமிக்கப்பட்டனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களை கொண்ட மண்டலத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின், ஏப்ரல் 29-ம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் மாவட்டங்களுக்கு 17 ஐஏஎஸ், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 65 அதிகாரிகளை கொண்டகளப்பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் சென்னையில் அதிக பாதிப்பு இருந்த ராயபுரம், திரு.வி.க.நகர், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களுக்கு தனித் தனியாக குழுக்களும், மீதமுள்ள 9 மண்டலங்களுக்கு 3மண்டலத்துக்கு ஒரு குழு என 3 குழுக்களும் அமைக்கப்பட்டன. மேலும்,இதர மாவட்டங்களுக்கு தனித்தனி குழுக்களும் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து, மே 1-ம் தேதி சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பு பணிக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனும், அவருக்கு உதவியாக 4 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த களப்பணிக் குழுக்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு அப்படியே உள்ளது.

இதுதவிர, சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரி கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு ஆகியோர் தலைமையிலும், திருவள்ளூருக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், ரயில்வே ஐஜி வி.வனிதா தலைமையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாநில தேர்தல்ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன், கடலோர பாதுகாப்பு குழுமடிஐஜி கே.பவானீஸ்வரி ஆகியோர்தலைமையிலும் குழு அமைக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x