Published : 29 Aug 2015 10:45 AM
Last Updated : 29 Aug 2015 10:45 AM

ரயில் வருவதை உணர்த்தும் எச்சரிக்கை அறிவிப்பான் கருவி: கோவையில் சோதனை அடிப்படையில் கட்டமைப்பு

ஆளில்லா லெவல் கிராசிங்கில் ரயில் வருவதை உணர்த்தும் எச்சரிக்கை அறிவிப்பான் கருவி கோவையில் சோதனை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அடிக்கடி விபத்து நேரிடும் இடமாக உள்ளது. சமீபத்தில் பெனுகொண்டாவில் நடைபெற்றது போன்ற விபத்து களை தவிர்க்கவும், அதன் மூலம் மனித உயிரிழப்பு மற்றும் ரயில் இயக்கத் தடையை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து, ரயில்வே துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் இடையே ஆளில்லா லெவல் கிராசிங் எண்.6-ல், சோதனை அடிப்படையில் ரயில் வருகை எச்சரிக்கை அறிவிப்பான் கருவி நிறுவப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் மூன்று பாகங்கள் உள்ளன. ஆளில்லா லெவல் கிராசிங்கில் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் லெவல் கிராசிங்கின் இருபுறமும் 1 கி.மீ. தூரத்தில் பொருத்தப்படும் 2 உணர்வி அமைப்புகள், உணர்வி அமைப்பில் ரயில்சக்கரங்களை எண்ணும் கருவி, ரயில் வருவதை உணரும் கருவி மற்றும் கம்பி மூலம் மற்றும் கம்பியின்றி சமிக்ஞை அனுப்பும் அமைப்பு ஆகியவை இருக்கும். இவற்றை இயக்க சூரிய சக்தி பேனல் மற்றும் பேட்டரி இருக்கும். கட்டுப்பாட்டு அமைப்பில் சமிக்ஞை பெறும் அமைப்பு, ரயில் வரும்போது ஒலி எழுப்பி, எரிந்து அணையும் எல்ஈடி விளக்கு மற்றும் சூரிய சக்தி பேனல், பேட்டரி இருக்கும்.

ரயில் உள்ளே வரும்போது முதலில் உள்ள உணர்வி அமைப்பு செயலாக்கப்பட்டு அது கட்டுப்பாட்டு அமைப்புக்கு சிக்னல் அனுப்பி எச்சரிக்கை மணியை இயக்கச் செய்யும். அது போலவே, ரயில் மறுமுனையில் உள்ள உணர்வி அமைப்பினை தாண்டிச் சென்ற பிறகு அது கட்டுப்பாட்டு அமைப்புக்கு சிக்னல் அனுப்பி எச்சரிக்கை ஒலியை நிறுத்தச் செய்யும்.

பாகங்கள் திருட முயன்றால்...

இந்த அமைப்புகளில் திருட் டைக் கண்டுபிடிக்கும் அமைப்பு இருப்பதால் யாராவது இந்த அமைப்புகளில் உள்ள பாகங் களை திருட முயன்றால், உடனடி யாக அது அருகில் உள்ள ரயில்வே ஊழியர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும். இதனால் ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்று திருட்டை தடுக்க இயலும்.

இந்த கருவி, மிகக்குறைவான மின் உபயோகத்தில் இயங்கும். மிக நீண்ட தொலைவு வரை தொடர்பு கொள்ள இயலும். தடையில்லாமல் இயக்கும். உடையாத எப்ஆர்பி கம்பங்கள். திருட முடியாத பாதுகாப்பு. உணர்வியின் தூரத்தை மாற்ற இயலும். ஒரு குறிப்பிட்ட தூரம் தாண்டியுள்ள ரயிலியக்கத்தை உணர்வதை தவிர்க்க இயலும்.

இதனால் சற்று தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டால், தேவையற்ற எச்சரிக்கை ஒலி எழுப்பப்படாது. எளிதில் நிறுவி, பராமரிக்கலாம். காற்று, மழை, பனி, புகைமூட்டம், தூசு, வெயில் மற்றும் ஒளியினால் இயக்கம் பாதிக்கப்படாது. சாதா ரண தொழிற்கூட அறிவியல், மருத்துவ தொலைத்தொடர்பு அலைவரிசையில் இயங்குவதால், இந்த அமைப்புக்கென தனி லைசென்ஸ் பெறத் தேவையில்லை.

அருகில் உள்ள எந்த ஒரு ரயில்தடத்திலும், 45 அடி தொலைவில் ரயில் வரும் போது உணர முடியும். இதில் உள்ள உணர்வியால் ஒரு ரயில் இன்ஜின் தனியாக வந்தாலும் உணர முடியும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x