

பொதுமுடக்கம் காரணமாக ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டார்கள். அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று கடந்த மாத இறுதியில் மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி மே 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில் மொத்தம் 1600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மொத்தம் 21.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குத் திரும்பி இருப்பதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) இரவு 11 மணிக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்படுகிறது. அங்குள்ள அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், புனே வழியாக 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையை வந்தடையும். பிறகு திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் வந்து புலம்பெயர்ந்த தமிழர்களை இறக்கிவிடும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் அறிவித்துள்ளார்.
அதேபோல், நாளை (21-ம் தேதி) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து வடமாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ரயில் மத்தியப் பிரதேசத்துக்கும், இன்னொரு ரயில் பிஹாருக்கும் புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.