Last Updated : 20 May, 2020 07:03 PM

 

Published : 20 May 2020 07:03 PM
Last Updated : 20 May 2020 07:03 PM

விபத்தில் உயிரிழந்த காவலர்: கண்ணீரில் தத்தளித்த குடும்பத்துக்கு கரம் கொடுத்த '2013 பேட்ச்'; நிதி திரட்டி ரூ.7.14 லட்சம் அளித்தனர்

சென்னையில் விபத்தில் உயிரிழந்த காவலர் ராம்கியின் குடும்பத்தினரிடம் நேற்று நிதியுதவி அளித்த '2013 பேட்ச்' காவலர்கள்.

திருச்சி

ஊரடங்கு காலத்தின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு, அவருடன் பணிக்குச் சேர்ந்த 2013 பேட்ச் குழுவினர் வாட்ஸ் அப், டெலிகிராம் குழுக்கள் மூலம் நிதி திரட்டி ரூ.7.14 லட்சம் அளித்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்தவர் ராம்கி. ஏடிஜிபி ஒருவரின் கார் ஓட்டுநராக இருந்த இவர், ஊரடங்கு காலப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கடந்த மே 3-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மதுரவாயல் அருகே விபத்தில் உயிரிழந்தார்.

விபத்தின் மூலம் ஏற்பட்ட இவரது உயிரிழப்பு காவல்துறையினர் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில் இவரது மனைவி காவ்யா மற்றும் 2 தங்கைகள் உள்ளிட்ட குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்த கேள்வியும் காவலர்கள் மத்தியில் எழுந்தது.

காவலர் ராம்கியின் அடையாள அட்டை.

எனவே, இவர் பணிக்குச் சேர்ந்த 2013-ம் ஆண்டு காவலர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை இவரது குடும்பத்துக்குச் செய்வதென முடிவு செய்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக '2013 பேட்ச்' காவலர்களிடம் உதவித்தொகைகள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட ரூ.7.14 லட்சத்தை ராம்கியின் தந்தை அன்பழகன், தாய் கௌரி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் இன்று (மே 20) வழங்கினர்.

இதுகுறித்து '2013 பேட்ச்' காவலர்கள் சிலர் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

"தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2013-ம் ஆண்டில் சுமார் 12 ஆயிரம் பேர் புதிதாகப் பணிக்குச் சேர்ந்தோம். தற்போது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இருக்கக்கூடிய இந்தக் காவலர்களை ஒன்றிணைக்கும் விதமாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப்-களில் '2013 பேட்ச்' என்ற பெயரில் குழுக்களை ஏற்படுத்தியுள்ளோம். இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் வரை இணைந்துள்ளனர்.

இக்குழுக்களில் ராம்கியின் மரணம் குறித்த செய்தி பகிரப்பட்டபோது, அவரது குடும்பத்துக்கு ஏதாவது செய்திட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்தனர். எனவே, ராம்கியின் நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள '2013 பேட்ச்' காவலர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு அக்குழுக்களில் பதிவிட்டோம்.

அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப நிதியுதவி அளித்தனர். ‘2013 பேட்ச்' மட்டுமின்றி, மற்ற ஆண்டுகளில் பணிக்குச் சேர்ந்த சில நண்பர்களும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.7.14 லட்சம் கிடைத்தது. அதனை சாலவாக்கம் அருகே மெய்யூரில் உள்ள ராம்கியின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளோம்.

அரசு சார்பில் ராம்கியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்பட்டாலும், அவருடன் பணிக்குச் சேர்ந்த எங்கள் சார்பிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்துள்ளது மனதுக்கு நிம்மதியைத் தருகிறது. ஏற்கெனவே, விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட்ட ‘2013 பேட்ச்' காவலர் ஒருவரின் சிகிச்சை செலவுக்காக எங்கள் குழுக்கள் மூலம் ரூ.1 லட்சம் வரை சேகரித்துக் கொடுத்தோம்.

பணியின்போது, நமக்கு ஏதாவது ஏற்பட்டால் குடும்பத்துக்கு உதவி செய்ய, மாநிலம் முழுவதும் நண்பர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை இதுபோன்ற செயல்கள் காவலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன''.

இவ்வாறு காவலர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் காவலர் அருண்காந்தி உயிரிழந்தபோது, '2010 பேட்ச்' குழுவினர் மூலம் அவரது குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x