

உம்பன் புயல் கடற்பகுதியிலிருந்து ஈரப்பதத்தை இழுத்துச் சென்றதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடும் அனல் காற்றால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இது மேலும் 6 நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் வலுவான சூப்பர் புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கிச் சென்றது. தற்போது அது மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையைக் கடக்கிறது. புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது.
காற்றின் ஈரப்பதத்தை புயல் இழுத்துச் செல்வதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கமான வெப்ப நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கோடைக் காலத்தில் கத்திரி வெயில் தொடங்கியபின் இதுவரை சென்னையில் 36 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் அதிகரிக்கவில்லை. ஆனால், 19-ம் தேதிக்குப் பின் 40 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது. புயல் ஆந்திரா விட்டுக் கடந்தபின் கடற்பகுதியிலிருந்து ஈரப்பதத்தை இழுத்துச் சென்றுவிடுவதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது.
19-ம் தேதிக்குப் பின் அதாவது ஆந்திரா ராயலசீமாவை புயல் கடந்த பின் படிப்படியாக வெப்பம் அதிகரித்து அடுத்து 5 முதல் 6 நாட்களுக்கு வெயில் உச்சமாக 40 டிகிரிக்கும் மேல் அதிகரிக்கும். அதாவது 24-ம் தேதி வரை இரவில் கூட கடல் காற்று இல்லாமல் வெப்பம் இருக்கும். இந்த வெப்பம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்.
இன்று சென்னையின் வெப்பநிலை பல இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்துள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து 27-ம் தேதி குறையும் என்று கூறப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் வெப்ப அளவு.
மே 21-ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்,
மே 22-ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்.
மே 23-ம் தேதி அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்.
மே 24-ம் தேதி அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும் .
மே 25 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்.
மே 26 குறைந்தபட்ச வெப்பநிலை 29°C ஆகவும் அதிகபட்சம் 42°C ஆகவும் இருக்கும். அதாவது அடுத்த செவ்வாய்க்கிழமை வரை இந்த வெப்பநிலை நீடிக்கும்.