

காவிரி டெல்டாவில் குறுவை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட முதல்வருக்குத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''காவிரி டெல்டாவில் முன் பட்ட குறுவை சாகுபடி சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி செய்யப்பட்டது. தற்போது மே முதல் வாரம் தொடங்கி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடைப் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் நேரிலும், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து நேற்று இரவு தமிழக முதல்வர் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றேன்.
இதனையடுத்து, இன்று முதல் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உடனடியாகக் கொள்முதல் செய்ய முதல்வர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தொலைபேசி முலம் தெரிவித்தனர்.
விவசாயிகளின் பாதிப்பை உணர்ந்து கரோனா நெருக்கடி காலத்திலும் உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர், உணவுத் துறை அமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.