Published : 20 May 2020 04:16 PM
Last Updated : 20 May 2020 04:16 PM

வீதிக்கு வந்த மதுரை மல்லிகைப்பூ: கலங்கும் விவசாயிகள்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் மவுசு பெற்ற மதுரை மல்லிகைப்பூ, தற்போது வாங்க ஆளில்லாமல் ரோட்டில் போட்டு வியாபாரிகள் கூவி கூவி விற்கின்றனர். கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பதால் போக்குவரத்து செலவு, பறி கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் கலங்கிப்போய் நிற்கின்றனர்.

மதுரை மண்ணில் கந்தக சத்து காணப்படுவதால் மற்ற மாவட்டங்களில் விளையும் மல்லிகைப்பூவை விட மதுரை மல்லிகைக்கு மணமும், நிறமும் அதிகம்.

மதுரை மல்லிகையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இந்த பூக்களை அழியாமல் தடுக்கவும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் மதுரை மல்லிக்கை எப்போதுமே தனி மவுசும், வரவேற்பும் உண்டு. தட்டுப்பாடாகாவே இந்த பூக்கள் கிடைப்பதால் அதிகாலையில் சந்தைக்கு சென்று வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.

‘கரோனா’வுக்கு பிந்தைய காலமான தற்போது அதற்கு நேர்மாறாக மதுரை மல்லிகை பூக்களை வியாபாரிகள் மதுரை ரோட்டோரமாக உள்ள நடைபாதைகளில் போட்டு கூவி கூவி விற்கின்றனர்.

ஆனால், வாங்க ஆளில்லை. கிலோ ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என சீசன் நேரத்தில் விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று கிலோ வெறும் ரூ.100 முதல் ரூ.130 வரையே விற்றது. அதையும் வாங்க ஆளில்லாமல் விவசாயிகள், செடிகளில் பறித்து கோயில்களில் உள்ள சாமிக்கு படைப்பதாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி ராஜா கவலை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘பனி நேரத்தில் மல்லிகை பூக்கள் பெரியளவில் விற்பனைக்கு வராது. அந்த நேரத்தில் கிலோ ரூ.5 ஆயிரம் வரை விலைபோகும். வெயில் அடிக்கும் தற்போதைய சீசன் காலத்தில் மல்லிகைப்பூ அதிகளவு உற்பத்தியாகும்.

கடந்த ஆண்டு இதேசீசன் நேரத்தில் கிலோ ரூ.600 முதல் ரூ.1000 வரை விற்றது. முகூர்த்த காலத்தில், விழாக்காலங்களில் இன்னும் விலை அதிகரிக்கும். ஆனால், தற்போது வெறும் ரூ.100க்கும், ரூ.130க்கு கூட வாங்க ஆள் வருவதில்லை. விவசாயிகளுக்கு பறிப்பு கூலி கூட கிடைப்பதில்லை.

அதனால், ரொம்ப தொலைவில் இருந்து யாரும் பூக்களை பறித்துவருவதில்லை. ஊமச்சிக்குளம், ஒத்தக்கடை, சத்திரப்பட்டி உள்ளிட்ட பக்கத்து கிராமங்களில் இருந்துதான் பூக்களை பறித்து வருகின்றனர்.

தற்போது முகூர்த்த நேரம் என்றாலும், திருமணங்கள், மற்ற சுப நிகழ்ச்சிகள் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் 10 பேர், 20 பேர் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். அதனால், பூக்கள் தேவை மிக குறைவாகவே உள்ளது. முன்பு கால 11 மணிக்கெல்லாம் பூக்களை விற்றுவிட்டு வீட்டிற்கு போய்விடுவோம். ஆனால், சாயங்காலம் வரை போராடினால் மட்டுமே வீட்டு செலவுக்கு ரூ.200 கொண்டு போக முடியுது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x