

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 72 ஆக இருந்தது.
அவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலி மாநகர பகுதிகளை சேர்ந்தவர்கள். களக்காடு, பத்தமடை, வள்ளியூர் பகுதிகளை சேர்ந்த ஒருசிலரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களில் பாதிப்பு 3 மடங்காகியிருக்கிறது. இந்த 10 நாட்களில் மகராஷ்டிரா, சென்னையிலிருந்து நூற்றுக்கணக்கனோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியிருந்தனர். அவர்களில் பலருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள்.
மாவட்டத்தில் நேற்று வரையில் 226 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். அவர்களில் 70 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, வள்ளியூர், மானூர், பாப்பாக்குடி பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 242 ஆகியிருக்கிறது. இவர்களில் 3-ல் 2 பகுதியினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.