

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் வரும் வாரம் கொண்டாடப்படவுள்ள ரமலான் பண்டிகை கூட்டுத் தொழுகையை தவிர்க்குமாறும் அவரவர் இல்லங்களிலேயே தொழுதுகொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி, இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது, இஸ்லாமியர்களின் சிறப்பான மாதமான ரமலான் மாதத்தின் 30 நாட்களும் கடைப்பிடிக்கப்படும். மற்ற நாட்களில் வழக்கமான நிலையிலான உணவுப் பழக்கத்துக்கு மாறாக இம்மாதத்தில் அதிகாலையில் உணவு உண்டு நோன்பு வைத்து மாலையில் சூரிய அஸ்தமனம் வரை தண்ணீர் கூட அருந்தாமல் தொழுகை, குரான் ஓதுதல் என கடைப்பிடித்து மாலையில் நோன்பைத் திறப்பார்கள்.
இம்மாதத்தில் மட்டும் ஐந்து வேளை தொழுகை என்பதை மாற்றி இரவு 9 மணிக்கு மேல் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள். கூடுதலாக ஜகாத் எனப்படும் தனது வருமானத்தைக் கணக்கிட்டு அதில் மார்க்கம் கூறும் வழிப்படி குறிப்பிட்ட சதவீதத்தை தானமாக ஏழைகளுக்கு அளிப்பார்கள். இம்மாதத்தில் பள்ளிவாசல்களில் மாலை நேரத்தில் நோன்பு திறக்கும்போது நோன்புக்கஞ்சி வழங்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.
ஊரடங்கு காரணமாக மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிவாசல்களில் தொழுகை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தராவீஹ் தொழுகையும், மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்வு, கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது அனைத்தும் சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டி தடை செய்யப்பட்டு அவரவர் வீடுகளிலேயே கடைப்பிடிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அப்போது இஸ்லாமியர்கள் காலையில் ரமலான் சிறப்புத் தொழுகையைச் செய்வார்கள். பள்ளிவாசல்கள் தவிர முக்கியமான பொது இடத்திலும் ஆயிரக்கணக்கில் கூடித் தொழுகை நடத்துவார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் கூட்டுத்தொழுகை குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது.
வரும் 25-ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கரோனா பாதிப்பால் ஊரடங்கு காரணமாக நாம் நமது தொழுகைகளை வீட்டிலேயே செய்து வருகிறோம், இந்நிலையில் ஊரடங்கு நான்காம் கட்டமாக மே 18 முதல் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரமலான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசலிலோ, பொது இடங்களிலோ நடத்துவது சாத்தியமில்லாததால் ரமலான் தொழுகையை அவரவர் வீடுகளிலேயே நடத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.