

சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 18 முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசியப் பொருட்களுக்கான செயல்பாடுகள் தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் முடிதிருத்தும் கடைகளும் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ''ஊரடங்கிற்கு முன்னதாக மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாயும் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடிதிருத்தும் தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினிச் சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிதிருத்துவோர் கடை வைத்திருப்பவர்கள் தரப்பில், வறுமையில் உள்ளதாகவும், சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே நிபந்தனைகளுடன் கடைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரசுத் தரப்பில், தற்போது ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் படிப்படியாகத் திறப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது
இதைப் பதிவு செய்த நீதிபதி, முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் சலூன் கடைகள் செயல்பட அனுமதிப்பது குறித்தும் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.