பேருந்து நிலையக் கடைகளுக்கு மூன்று மாத வாடகையைத் தள்ளுபடி செய்க: அரசுக்கு மதிமுக மாநில இளைஞரணித் துணை அமைப்பாளர் கோரிக்கை

மார்கோனி
மார்கோனி
Updated on
2 min read

50 நாட்களுக்கும் மேலாகப் பேருந்துகள் ஓடாததால் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களுக்குள் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கான வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மதிமுக மாநில இளைஞரணித் துணை அமைப்பாளரான சீர்காழியைச் சேர்ந்த இ.மார்கோனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சீர்காழி நகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை மனுவும் அளித்துள்ளார். சீர்காழியில் தனது கட்டிடத்தில் இயங்கி வரும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாடகையில் இயங்கி வரும் அசைவ உணவகத்துக்கு மூன்று மாத வாடகை வேண்டாம் என்ற அறிவித்துள்ள இவர், இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்குத் தன்னால் முடிந்த நிவாரண உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில், சீர்காழி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என்று கோரிக்கை மனு அளித்திருக்கும் மார்கோனி, தமிழகம் முழுவதுமே பேருந்து நிலையங்கள் முடங்கிக் கிடப்பதால் அங்குள்ள அனைத்துக் கடைகளுக்குமே மூன்று மாதத்துக்கான வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசிய அவர், “கடந்த மூன்று மாதங்களாக சீர்காழி நகராட்சிக்குக் கட்டுப்பட்ட புதிய பேருந்து நிலையக் கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன. இங்கு கடை நடத்தும் அனைவருமே மாதம் தவறாமல் நகராட்சிக்கு வாடகை செலுத்தி வருபவர்கள். இந்தக் கடைகளின் வருமானத்தை வைத்தே தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள்.

இந்நிலையில், தற்போது பொதுமுடக்கம் காரணமாக பேருந்துகள் ஓடாததால் இந்தக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு கடை நடத்துபவர்கள் முற்றிலுமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சீர்காழியில் உள்ள மற்ற கடைகள் திறந்திருந்தாலும் பேருந்து நிலையம் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை பேருந்து நிலையக் கடைகள் எதுவும் திறக்கப்படவே இல்லை.

இதுநாள் வரை மாதம் சுமார் 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை வாடகை செலுத்தி நகராட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்துவந்த இவர்களுக்கு இப்போது நகராட்சி நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். வாழ்க்கைப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் இவர்களின் பரிதாபமான நிலையைக் கருத்தில் கொண்டு சீர்காழி நகராட்சி நிர்வாகம், பேருந்து நிலையக் கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கான வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசின் அறிவிப்பை ஏற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான தனியார் கடை மற்றும் வாடகை வீட்டு உரிமையாளர்கள் பலரும் தாங்களே முன்வந்து இந்தக் கரோனா காலத்தில் வாடகை வேண்டாம் என்று கூறியுள்ளனர். எனவே, சீர்காழி நகராட்சி நிர்வாகமும் அவ்வாறே பின்பற்றி நகராட்சி வியாபாரிகளின் கடைகளுக்கு மூன்று மாத வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இங்கு மட்டுமில்லாது தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் கடை வைத்திருப்போரின் நிலை இதுவாகத்தான் இருக்கும். எனவே, தமிழகம் முழுக்கவே பேருந்து நிலையக் கடைகளுக்கு மூன்று மாதத்துக்கான வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார் மார்கோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in