

'உம்பன்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
'உம்பன்' சூப்பர் புயல் வலுவிழந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. இது, மேற்கு வங்கம் - வங்க தேசத்தின் கத்தியா தீவு இடையே இன்று (மே 20) மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா வடக்கு கடற்கரைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும், தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"உம்பன் புயல் கரையைக் கடக்கும்போது முதலில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படும். விளம்பரப் பலகைகள் தூக்கி வீசப்படும். குடிசை வீடுகள் பாதிக்கப்படும். பழைய கட்டிடங்கள் பாதிக்கப்படும். இதற்குத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள் ஆகியவை தகுந்த அறிவுரைகளை வழங்கி வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மிக கவனமாக அந்தந்த மாநிலங்கள் இதனைக் கையாண்டு கொண்டிருக்கின்றன.
சென்னை வானிலை ஆய்வு மையம் சாதாரணக் காலங்களில் 6 மணிநேரத்திற்கு ஒருமுறை வானிலை அறிவிப்பை அளிக்கும். இதுபோன்ற புயல் காலங்களில் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை அறிவிப்பு வழங்கும். இன்று இந்தப் புயல் கரையைக் கடக்கவிருப்பதால் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அறிவிப்பு வெளியிடும்.
இதனை உன்னிப்பாக கண்காணிக்க மாநில அவசரக் கட்டுப்பாட்டு அறை உள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய்துறைத் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
புயல் கரையைக் கடக்கும் வரை உன்னிப்பாக கவனிக்கப்படும். புயல் எந்தத் திசையில் நகர்கிறது என்பதை மக்களுக்குத் தொடர்ந்து தெரிவிப்போம்".
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.