Published : 20 May 2020 10:37 AM
Last Updated : 20 May 2020 10:37 AM

ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்: எந்நேரமும் 'பப்ஜி' விளையாடிய பாலிடெக்னிக் மாணவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழப்பு

செல்போனில் எந்நேரமும் 'பப்ஜி' விளையாடிக் கொண்டிருந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் ஈரோட்டிலுள்ள பிரபல முட்டை நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார், ஈரோட்டிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்துள்ளார்.

மாணவன் சதீஷ்குமார் எந்நேரமும் அவரது செல்போனில் 'பப்ஜி' விளையாட்டு விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இதனை வீட்டினர் பல முறை கண்டித்தும், செல்போனைப் பிடுங்கி வைத்தும் கேட்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார்.

மேலும், செல்போன் கேமில் வெற்றி பெற வேண்டுமென்கிற உந்துதல் அதிகம் இருந்து வந்துள்ளதுடன் அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றியே பெற்று வந்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து செல்போன் விளையாட்டுகளிலேயே மூழ்கியிருந்துள்ளார். யார் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அதே வேளையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (மே 19) மதியமும் வழக்கம் போல் வீட்டுக்கு வெளியே செல்போன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். மிகவும் வியர்த்துப் போன நிலையில் விளையாடிக் கொண்டிருந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்திற்கு மேல் விளையாட்டைத் தொடர முடியாமல் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத் தாமதமாகப் பார்த்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து போய் விட்டதாகவும், அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

செல்போனில் விளையாடி அதிக மன அழுத்தம் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x