

பொதுமக்களுடன் மிக நெருக் கமாக, எந்த நேரத்திலும் கரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் பணி புரியும் எங்கள் பணியை அரசும், மக்களும் அங்கீகரிக்கவில்லை என ரேஷன் கடை பணியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது:
ஊரடங்கு காலத்திலும் பொதுமக்கள் தினமும் அதிகம் திரளும் இடம் ரேஷன் கடைகள். ஊரடங்கு தொடக்கம் முதல் தற்போது வரை ஓய்வே இன்றி எங்களை அதிகாரிகள் சக்கையாக பிழிகிறார்கள்.வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பணிபுரிவோம். மற்ற அரசு பணியாளர்களை போல் எங்களுக்கு அதிக ஊதியம் கிடையாது. பணிப் பாதுகாப்பும் இல்லை.தற்போது காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சாப்பிடக் கூட நேரமின்றி பணிபுரிகிறோம். இலவச பொருட்கள், டோக்கன் விநியோகம், ரூ. 1000 உதவித் தொகை, என எங்கள் பணிக்கு ஓய்வே கிடையாது. பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண் டும். எவ்வளவுதான் கூறினாலும் கடைகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடுகிறார்கள். டாஸ்மாக் கடைகளுக்குக் கூட போலீஸ் பாதுகாப்பு அளிக் கின்றனர். ஆனால், ரேஷன் கடைகளை கண்டு கொள் வதில்லை. ஒருமுறை மட்டும் முகக் கவசம் கொடுத்தனர். அதன் பிறகு நாங்களே முகக் கவசம், சானிடைசர் வாங்கினோம்.
அரிசி தரமில்லாமல் இருப் பதற்கு நாங்கள் காரணம் இல்லை. ஆனால் பொதுமக்கள் எங்களிடம் சண்டை போடுகிறார்கள். அரி சியை கொள்முதல் செய்கிற இடத்திலேயே தவறு நடக்கிறது. அரசு அறிவித்த சிறப்புப் படி ஒரு நாளைக்கு ரூ. 200 . அதையும் சில கூட்டுறவுப் பணியாளர்களுக்கு இன்னும் வழங்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.