

ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் நேற்று முதல் ஈரோட்டில் விசைத்தறிக் கூடங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியதால் ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக விசைத்தறிக் கூடங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. விசைத்தறிக் கூடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், வெளிமாவட்ட தொழிலாளர்களை அனுமதிக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவர்களை பணி செய்ய உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் இயங்க தொடங்கியுள்ளன. விசைத்தறிகள் இடைவிடாமல் 24 மணி நேரமும் இயங்கக்கூடியவை. தற்போது, வெளி மாவட்ட, வெளிமாநிலத் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
ஏற்கெனவே உற்பத்தி செய்த துணிகள், ரூ.500 கோடிக்கு மேல் இருப்பில் உள்ளன. அவற்றை ஆர்டர் வழங்கியவருக்கு அனுப்ப முடியவில்லை. புதிதாக ஆர்டர் தருபவர்கள் வடமாநிலங்களில் உள்ளனர். அங்கு இயல்பு நிலை திரும்பாததால் கடைகள், ஜவுளி சார்ந்த தொழில்கள் தொடங்கப்படவில்லை. வடமாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வந்தால் மட்டுமே முழு அளவில் இயங்க தொடங்கும். என்று கூறினார்.