

சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீதம் வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் (காட்மா) சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், சங்கத் தலைவர் சி.சிவக்குமார் தலைமையில் கோவையில் நடைபெற்றது. இணைத் தலைவர் ஜே.மகேஸ்வரன், பொதுச் செயலர் ஜி.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜி.நடராஜன், துணைத் தலைவர்கள் டி.எஸ். துரைசாமி, கே.எஸ்.சங்கரநாராயணன், ஜெ.புவியரசு, ஆர்.சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசால் அறிவிக்கப் பட்ட கடன் அறிவிப்புகள் தொழில்முனைவோரை சரியான முறையில் சென்றடைவதை கண்காணிக்கவும், குறைகளை சரி செய்யவும் ஆட்சியர் தலைமையில், வங்கி, மாவட்ட தொழில் மையம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அதிகாரிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து, மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.
மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள கடனுதவிகளை 6 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்க வேண்டும். ஏற்கெனவே பெறப்பட்டுள்ள கடன்களுக்கு 6 மாத வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும். ராணுவம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களில் 70 சதவீதத்தை குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
மூலப்பொருட்களின் விலை யேற்றத்தை தடுத்து, தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.