பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம்: உதவிக்கரம் நீட்டிய சக காவலர்கள்!

பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம்: உதவிக்கரம் நீட்டிய சக காவலர்கள்!
Updated on
1 min read

பணியின்போது உயிரிழந்த சென்னை மாநகரப் போக்குவரத்துப் பிரிவு காவலர் ஒருவரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் ஒன்று சேர்ந்து 12 லட்ச ரூபாய் நிதி திரட்டி அளித்திருக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் அருண்காந்தி சிறந்த கபடி வீரர். அதன் விளைவாக ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் காவல் துறையில் 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

சென்னை மாநகரப் போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த அருண்காந்தி கடந்த மாதம் 8-ம் தேதி பணியிலிருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார். அப்போது அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர், ‘அருண்காந்தியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்’ என்று அறிவித்தார்.

இப்படி அரசு ஒருபக்கம் உதவிக்கரம் நீட்டிய நிலையில் இன்னொரு பக்கம் அருண்காந்தி வேலையில் சேர்ந்த அதே 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழகக் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். மொத்தம் 12 லட்சம் ரூபாய் நிதியும் சேர்த்தனர்.

அந்தப் பணத்தில் சக நண்பர் அருண்காந்தியின் மகளின் எதிர்காலம் கருதி அவரது பெயரில் 6 லட்ச ரூபாயை வைப்பு நிதியாகச் செலுத்தினர். மீதமுள்ள தொகை 6 லட்சத்தை குடும்பச் செலவுகளுக்காக அவருடைய மனைவி மற்றும் பெற்றோரிடம் கொடுத்து உதவியுள்ளனர். இதனையறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் வடுவூர் கிராம மக்கள், அருண்காந்தியின் 2009-ம் ஆண்டு பேட்ச் காவல் நண்பர்களுக்குத் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in