

கரோனா வைரஸ் வருவதைத் தடுக்க யோகா, அலோபதி, ஹோமியோபதி கூட்டு மருத்துவ முறைகளை மதுரை மாநகராட்சி பரிந்துரைகிறது. இதற்கு கைமேல் பலன் கிடைப்பதாக மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்தார்.
மதுரை முனியாண்டிபுரம் தர்ம சாஸ்தா விஹார் குடியிருப்போர் நலச்சங்கம், ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்போர் நலச்சங்கம், எஸ்.எஸ்.காலனி ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கம், கோச்சடை சாந்திசதன் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகிய குடியிருப்பு சங்கங்களின் சார்பில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பேசியதாவது:
மாநகராட்சியில் கோரிப்பாளையம் சந்திப்பு, யானைக்கல் சந்திப்பு, பெரியார் சந்திப்பு உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனாவை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று என்பது யாரிடம் இருக்கின்றது என்பதை அறிய முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இறப்புவிகிதம் 1 சதவீத்திற்கு குறைவாகத்தான் உள்ளது.
ஒருவர் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் கரோனா வருவதும் போவதும் தெரியாது. எதிர்ப்புத் சக்தி குறைவாக இருந்தால் தொண்டை வலி, இருமல். சளி, காய்ச்சல் போன்றவை இருப்பதுடன் பல்வேறு உடல் உபாதை களையும் ஏற்படுத்தும்.
ஏனென்றால் கரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. கரோனா வைரஸ் வருவதை தடுப்பதற்கு யோகா மருத்துவமுறைகள், அலோபதி, ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக வைட்டமின் சி மாத்திரைகள், ஜிங்க் மாத்திரை தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட வேண்டும்.
ஹோமியோபதி மாத்திரைகள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். மேலும், கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு குடிநீர் பருக வேண்டும்.
இது தவிர கைப்பக்குவ மருந்துகளான இஞ்சி, பூண்டு சாறு தயார் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பு செய்யலாம். மதுரை மாநகராட்சி பகுதிகளில் குறைந்தது 4 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றனர்; அவர்கள் அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்குவது சிரமமாகும்.
எனவே மதுரை மாநகராட்சியில் உள்ள 142 வரையறுக்கப்பட்ட குடிசைப்பகுதிகளிலும், 189 வரையறுக்கப்டாத குடிசைப்பகுதிகளிலும் உள்ள சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு மாநகராட்சியின் சார்பில் இலவசமாக மாத்திரைகள், கபசுர குடிநீர் சூரணப் பொடி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பொதுமக்களுக்கு அந்தந்த குடியிருப்போர் நலச சங்கங்களின் மூலம் அந்தந்த குடியிருப்பு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.