

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் கடைகள், டீக்கடைகள், சலூன்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் கடைகள்கூட இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் பக்தர்கள் வழிபடவும் அனுமதியளிக்க வேண்டும் என அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் இதுவரை அனுமதி அளிக்கப் படவில்லை. வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று பதிலளித்த தமிழக அரசு, அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் தங்களால் உரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்ய இயலாது. காவலர்கள் பற்றாக்குறை உள்ளது என்று பதில் அளித்தது. இதையடுத்து வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் வழிபட ஏதுவாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் உத்தரவையும் ஏற்று, பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அந்த ஏற்பாடு அமைந்துள்ளது.
பக்தர்கள் வசதிக்காக அவர்கள் கோயிலுக்கு வெளியே இருந்து சுவாமியை வழிபட வசதியாக காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும் பொழுது கீழகோபுர வாசலில் உள்ள கதவுகள் திறக்கப்படுகின்றன. அங்கிருந்து பார்த்தால் சன்னிதி தெரியும் என்பதால் பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை மனமுருக தரிசனம் செய்ய முடியும்.
தீபாராதனை நடைபெறும் நேரத்தில் மட்டும் திறக்கப்படும் வாசல் கதவு, தீபாராதனை முடிந்ததும் மீண்டும் சாத்தப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த ஏற்பாட்டால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.