

அஸ்டமேரியா, ஜெர்பரா, ஷால்வியா, பெட்டூனியா, ஹாஸ்டர், பிளாக்ஸ், ஃபேன்ஸி, மேரி கோல்டு, அமெரிக்கன் மேரி கோல்டு, லில்லியம்... என கிட்டத்தட்ட 460 வகையான சுமார் 5 லட்சம் மலர்கள். தொட்டியில் வளர்க்கப்பட்ட மலர்கள் மட்டுமே 15 ஆயிரத்தைத் தாண்டும். ஊட்டி தாவரவியல் பூங்காவின் மலர்க் கண்காட்சியில் இத்தனை மலர்களும், ரசிக்க பார்வையாளர்கள் இன்றி மவுனமாகக் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும் ஊட்டி மலர்க் கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள். மே 18, 19, 20, 21 மற்றும் 22 ஆகிய 5 நாட்களில் தினமும் 60 ஆயிரம் பேர் வீதம், சுமார் 3 லட்சம் மக்கள் மலர்களைக் கண்டு களித்திருப்பார்கள். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக மலர் கண்காட்சி தடை செய்யப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்கள் மட்டுமே இங்கு வந்து செல்கிறார்கள்.
திங்கள்கிழமை அன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த மலர்க் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தார். அவருடன் அரசு அலுவலர்கள் 70 பேர் வந்திருந்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மலர்க் கண்காட்சி குறித்து எதையும் பேசவில்லை. “வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து யாராவது நீலகிரி வந்தால் அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப் படுவார்கள்” என்று அங்கேயும் கரோனா பற்றித்தான் பேசினார்.
இந்நிலையில், மலர்க் கண்காட்சி குறித்து, தாவரவியல் பூங்காவைப் பராமரித்து வரும் தோட்டக் கலைத் துறை அலுவலர்களிடம் பேசினோம்.
“இதற்கு முன் 1999-ல் நீலகிரி தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. அப்போதும்கூட உள்ளூர் மக்கள் பார்வையிடத் தடை இருக்கவில்லை. இப்போதுதான் முழுமையாக உள்ளூர் மக்கள்கூட வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக மே 1-ம் தேதி இங்கே குவியும் மக்களை வைத்தே, மே மத்தியில் நடக்கும் 5 நாள் மலர்க் கண்காட்சிக்கு எத்தனை லட்சம் மக்கள் வருவார்கள் என்று தோராயமாகக் கணக்கிட்டுவிடுவோம். எப்போதுமே மே 1-ம் தேதி 80 ஆயிரம் பேருக்குக் குறைந்ததில்லை. மலர்க் கண்காட்சி நாட்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளார்கள். இந்த ஆண்டு கரோனா காரணமாக மக்கள் வரவில்லை.
உள்ளூர் மக்கள் மட்டும் பார்வையிடும் வகையிலாவது மலர்க் கண்காட்சியை நடத்தலாமே என்று பொதுமக்கள் சார்பாக ஒரு கோரிக்கை வைத்தார்கள். ஆனால், கண்காட்சியை நடத்தினால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
எனவே, வெளியாட்கள் யாரையும் இதற்குள் அனுமதிப்பதில்லை. அரசு ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி. குறிப்பாக, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே வரலாம். அவர்கள் கரோனா பணியில் ஈடுபட்டு ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் இங்கே வந்து மலர்களைப் பார்த்தால் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு வருபவர்கள் தனிமனித இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
கரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் கடந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில் இத்தனை லட்சம் மலர்களை இங்கு வளர்த்துப் பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது முக்கியமான கேள்வி. இது குறித்து தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் விளக்கினர்.
“மலர்க் கண்காட்சிக்கு மலர் நாற்று நடவு என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடும். இன்னின்ன இடத்தில் இந்த மலர்கள் என்பதைக்கூட முடிவு செய்து, மலர் நாற்றுக்களை வளர்க்க ஆரம்பிப்போம். கரோனா பொது முடக்கம் என்பது 2 மாதம் முன்புதானே வந்தது. இப்படிப் பல நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாதே. அதனால் வளர்த்த மலர்கள் வளர்க்கப்பட்டதுதான். எப்போதும் போல் அதை அலங்கரித்துவைக்க வேண்டியது எங்கள் வேலை மட்டுமல்ல; கடமையும் அல்லவா?” என்றனர் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் மலர்க் கண்காட்சியால் தோட்டக்கலைத் துறைக்குக் கணிசமான வருமானம் கிடைக்கும். எனினும், மலர்களை அக்கறையுடன் வளர்த்துப் பராமரிக்கும் ஊழியர்கள் ஒவ்வொரு வருடமும் மன நிறைவில்லாமல்தான் இருக்கிறார்கள். இந்தப் பணியில் சுமார் 200 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் யாருக்கும் பணி நிரந்தரமில்லை. பெரிய சம்பளமும் இல்லை. ‘இந்த வருடமாவது நமக்குப் பணி உத்தரவு வரும். பணி நிரந்தரமாகும்’ என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து நிற்கிறார்கள்.
இந்த முறை கரோனா ஊரடங்கு காரணமாக, அவர்கள் மேலும் மனவருத்தம் அடைந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் குரலிலேயே உணர முடிந்தது.