ஜோதிமணி விவகாரம்: ஊடக விவாதங்களில் பாஜகவினர் அநாகரிகமாக நடந்துகொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது; காங்கிரஸ் கருத்து

செல்வப்பெருந்தகை: கோப்புப்படம்
செல்வப்பெருந்தகை: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என, ஜோதிமணி விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை தலைவர் கு.செல்வப்பெருந்தகை இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:

"நேற்று (மே 18) தனியார் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணியும், நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் பாஜக செய்தித் தொடர்பாளர் கரு.நாகராஜனுடன் விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

விவாதத்திற்கிடையில் ஜோதிமணியை ஒரு பெண் என்றும் பாராமல் பாஜகவைச் சார்ந்த கரு.நாகராஜன் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இந்த கீழ்த்தரமான பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை வன்மையாக கண்டிக்கிறது.

இதுபோன்ற அநாகரிமாக நடந்துகொள்ளும் செய்தித் தொடர்பாளர்களை பொது விவாதங்களில் தவிர்ப்பது நல்லது. இதனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை செய்தி நிறுவனங்களுக்கு ஓர் கோரிக்கையாக வைக்கிறது.

ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது".

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in